பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

சிலவரிகள் எழுதியதும் மங்கிவிடும். இடக்கை விரல்களைச் சுருட்டி வைத்து அவ்விடை வெளியில் பார்த்து எழுதுவேன். பின்னர் அதுவும் மங்கும்; வேதனையுடன் நிறுத்திவிட்டு, இடைவேளை கொடுத்துப் பின்னர் எழுதுவேன். இக்கவியுலக ஆட்சி இரவுநேரத்திலே தான் நடைபெறும்; இரவு ஒரு மணியிலிருந்து மூன்று மணிவரை. சிலநாளிற் பகலிலும் செங்கோல் செலுத்துவதுண்டு. பகலை இரவாக்கிக் கொள்ள அப்போது கதவுகள் சார்த்தப்பட்டிருக்கும். பண்டிதமணிபற்றி உலகஞ் சுற்றிய தமிழர் திரு. சோம. லெ. எழுதிய நூலும் பெருமழைப்புலவர் திரு. சோமசுந்தரனார் எழுதிய நூலும் என்னாட்சிக்குச் செங்கோலும் வெண்கொற்றக் குடையுமாய் விளங்கின. வித்துவான் திரு வி. சு. திருநாவுக்கரசு எழுதிய நூல் அமைச்சராக நின்று உதவிற்று. அற்றை நாளில் மகிபாலன்பட்டிக்குச் செல்வோர் வழியிடை எத்துணைப் படருழந்தனரோ அத்துணைப் படர் யானும் அடைந்தேன், எனினும் குறிக்கோளை நோக்கியே நடந்தேன். எப்படியோ என் தாய்க்கு ஓர் அணிகலன் செய்து முடித்தேன் என்ற பெருமிதவுணர்வால் படர் மறந்து தளர்வு துறந்து நிமிர்ந்து நிற்கின்றேன்.

இந்நூற் பாடல்களுள் உணர்ச்சிப் பெருக்கால் உந்தி வந்தன சில; கண்தொல்லையாற் பிந்தி வந்தன சில; உடற்றளர்வாலும் புறச்சூழலாலும் இடர்ப்பட்டு இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தியன சில; கனவிற் பிறந்தனவுஞ் சில. நயங்கூறும் நாயகன் வரலாறாதலின் ஆங்காங்கே நயங்களின் சாயல் விரவிக் கிடக்கும்; தொனிப்பொருளும் தோன்றக் கூடும். பயில்வோர் பார்வைக்கு அவை தென்படுமேல், பார்த்துப் படித்துப் படித்துச் சுவைத்து மகிழ்க!

இந்நூலுக்கு "ஊன்றுகோல்" எனப் பெயருந்தந்து தாமே மனமுவந்து சிறப்புப் பாயிரமும் அளித்துப் பெருமை தந்த துணைவேந்தர் டாக்டர் வ. சுப. மாணிக்கனார் அவர் களின் தமிழ் நெஞ்சத்தை நன்றிப் பெருக்குடன் நினைந்து நினைந்து மகிழ்கின்றேன். நமது நுண்மாண் நுழைபுலங் கொண்டு அணிந்துரை நல்கிய அறிஞர் தமிழண்ணலைப் போற்றி மகிழ்கின்றேன்.

அன்பன்,
முடியரசன்