பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1940ஆம் ஆண்டில் தந்தை பெரியாரின் தன்மான இயக்கத்தில் தொடர்பு கொண்டார். இத்தொடர்பு அவருடைய ஆளுமையை வெற்றிபெறச் செய்தபோதிலும் 1943ஆம் ஆண்டு வித்துவான் தேர்வில் தோல்வியுறச் செய்தது. அவர் தோல்வியுறவில்லை; தோல்வியுறுமாறு செய்யப்பட்டார்.

இடையிலே நவாபு டி. எசு. இராசமாணிக்கம் நாடகக்குழு தம்பால் பணியாற்ற வருமாறு அழைத்தது: சென்ருர். அங்கிருந்த "சிறைவாழ்க்கை”யும் மதவழிபாட்டு முறைகளும் வெறுப்பை விளைத்தன. எனவே போன சுவடு அழியுமுன்னரே திரும்பி வந்துவிட்டார். பின்னர்த் தம்மைத் தோல்வியுறச் செய்தவர்களைத் தோற்கடிப்பதற்காகத் தலைமறைவாக இருந்து படித்து 1947இல் வித்துவான் பட்டம் பெற்றார்.

1947-1949 வரையிலான இரண்டாண்டுக் காலம் சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினர். இக்காலம் அவர்தம் எழுத்து வன்மை உரம் பெற வாய்ப்பாக அமைந்தது. மட்டுமின்றி அறிஞர் பலரோடு தொடர்பு கொள்ளவும் ஏற்றதாக இருந்தது. போர்வாள், கதிரவன், குயில், முருகு, அழகு முதலிய இதழ்கள் இவர்தம் சிறுகதைகளையும், கவிதைகளையும், கட்டுரைகளையும் தாங்கி வந்தன. அப்பொழுது புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த பொன்னி எனும் இலக்கிய இதழ் 'பாரதிதாசன் பரம்பரையில்' முன்னணியில் நிற்பவராக அறிமுகம் செய்து வைத்தது.

சென்னையில் பேராசிரியர் மயிலை. சிவமுத்து, தமிழ்த்தென்றல் திரு. வி. க. , கவிஞர் வாணிதாசன் ஆகிய புலமைச் சான்றோர்களுடன் இவர் இடையறாத் தொடர்பு கொண்டிருந்தார்.

1949ஆம் ஆண்டு பேராசிரியர் மயிலை. சிவமுத்து அவர்களின் சீரிய தலைமையில் கலைச்செல்வி என்னும் நலத்தகையாரைக் கலப்புத் திருமணம் செய்து கொண்டார்.