பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கஅ

ஊன்று கோல்


கசடற மொழியில் தேற
இலக்கணங் கற்க எண்ணும்
நசையின ராகி நாளும்
நயந்தது பயின்று வந்தார்
அசைவிலா ஊக்கங் கொண்டே
ஆசானை அணுகிக் கற்க
இசையுநர் ஒருவர்த் தேடி
இருந்தன ராக அந்நாள்27

படித்தநல் லிலக்க ணத்திற்
பழுத்ததோர் புலமை யாலே
அடித்துரை யாற்ற வல்ல
அரசன்சண் முகனார் நட்புக்
கிடைத்தது கதிரே சர்க்குக்
கிளர்ந்தெழும் உணர்வு பொங்கப்
படித்தனர் அவிர்பால் நன்கு
பழையதொல் காப்பி யத்தை28

சொல்லிய ஆசான் பாடஞ்
சொல்லுமுன் உணர்ந்து கொண்ட
நல்லியற் புலமை கண்டு
நயந்தவர் வியந்து நின்றார்
முல்லையின் மணத்தைக் காட்ட
முன்வருந் தென்ற லானர்;
கல்வியின் மணியைத் தீட்டிக்
கடைந்தொளி நல்கி நின்றார்29