பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைபயில் காதை

ககூ


தன்னுணர் வுந்தித் தள்ளத்

தணிவிலா ஆர்வத் தாலே

தென்மொழி தேர்ந்த பின்னர்

வடமொழி தெளிவான் வேண்டி

நன்னய மொழியில் வல்ல

நல்லவர்த் தேடி நின்றார்:

பன்மொழி கற்றுத் தேறல்

பைந்தமிழ்க் காக்கந் தானே30

சாத்திரங் கற்றுத் தேர்ந்த

[1]நாரணன் என்று சாற்றும்

சாத்திரி ஒருவர்க் கண்டார்

தம்முளக் கருத்தைச் சொன்னார்,

பாத்திரம் ஏற்ற தென்று

பயிற்றிட அவரும் நேர்ந்தார்;

ஏத்திடும் வண்ணங் கற்றார்

இருமொழி வல்ல ரானர்31

வடமொழிப் பயிற்சி முந்நூல்

வகுப்பினர்க் குரிய தென்பார்

அடஇது வியப்பே யன்றோ?

அப்படி மொழிதான் உண்டா?

இடமுடை ஞாலத் துள்ளார்

எம்மொழி விழைவ ரேனும்

திடமுடன் முயல்வ ராகின்

தெள்ளிதின் உணர லாகும்32


  1. 1நாரணன்- தருவை நாராயண சாத்திரியார் இவரிடம் ஐந்தாண்டுகள் கதிரேசர் வடமொழி பயின்றார்.