பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊன்றுகோல்


துளிர்த்தெழும் ஆர்வம் ஒன்றே
துணையெனக் கொண்டார்; ஆற்றல்
பளிச்சிடும் வண்ணம் தொன்மைப்
பழமொழி கற்றுத் தேர்ந்தார்;
அளித்தி ஈட்டு கின்ற
அக்குடிப் பிறந்த செம்மல்
கொழித்திடுங் கல்விச் செல்வம்
குவித்தனர் வழங்கு தற்கே33

அம்மொழி வல்லார் தாமும்
ஆவென வியந்து நிற்கச்
செம்மையிற் றெளிந்து தேர்ந்து
செழும்புலம் மிளிரப் பெற்றார்,
எம்மொழி பயின்ற ரேனும்
[1] இரும்புலம் பெற்ற ரேனும்
தம்மொழி மறந்தா ரல்லர்
தமிழராய் வாழ்ந்து நின்றார்34

வாய்மொழி கல்லா ராகி
வருமொழி மட்டுங் கற்றுத்
தாய்மொழி பழித்து வாழ்ந்து
தமிழரென் றிருப்பா ருள்ளார்;
ஆய்மொழி பயின்றும் மற்றை
அயன்மொழிக் கடிமை யாகும்
நாய்மனங் கொள்வார் தாமும்
நந்தமிழ் நாட்டில் உள்ளார்35


  1. பெரும்புலமை