பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஊன்றுகோல்

௨௪

வழங்குதலே வழக்காக்கி வாழ்ந்திருந்த
வணிகர்சிலர் புதியஅறஞ் செயநி னைந்தார்
முழங்குதிரைக் கடல்கடந்து முயன்றுபெறுஞ்
செல்வமெலாம் ஈந்துவக்க முனைந்து வந்தார்;
எழுங்கலைகள் பலவள ருங் கழகங்கள்
எழிலறிவுக் கலைக்கோவில் எழுப்பி நின்றார்;
பழங்கலைகள் பதிப்பித்தார் தமிழிசைக்குப்
பயன்பட்டார் மாறிவருங் காலம் நோக்கி 3

கணக்கிட்டுச் செட்டோடு வாழுமவர்
கல்விக்குக் கணக்கின்றி வழங்கி வந்தார்;
பணக்கட்டுப் பாடின்றி வழங்கியதால்
பாரிலுளார் வள்ளலென அவரைச் சொன்னார்;
மணக்கட்டும் அறிவுமணம் மலரட்டும்
கலைமலர்கள் எனவிழைந்து செல்வ நீரை
அணைக்கட்டுப் போடாமல் திறந்துவிடும்
அழகுளத்தைப் பெருமனத்தை வியவார் யாரே? 4

நல்லறத்தை விலைகொடுத்து வாங்குவது
நாகரிகச் செயலன்று நாளும் ஒங்கும்
பல்வளங்கள் பெற்றவர்தாம் ஊருணிபோல்
பழமரம்போல் மருந்துமரம் போல நின்று
நல்குதலை இயல்பாகக் கொளல்வேண்டும்
நல்லவர்கள் ஒப்புரவென் றதைத்தான் சொல்வர்;
இல்லறத்தாள் மனமகிழத் தலையளித்தல்
இயல்பன்றோ? விலைகொடுத்துப் பெறுவா ருண்டோ 5