பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊன்றுகோல்


பதினாறாம் ஆண்டுவிழா சபைந டத்தும்
பருவத்தில் விரிவுரைகள் ஆற்ற வந்த
மதிவாணர் பலர்கூடிச் சிந்தித் தாய்ந்து
மகிபாலன் பட்டியெனும் பூங்குன் றத்துக்
கதிரேசர் சபைவளர ஆற்றுந் தொண்டும்
கற்றுணர்ந்த நற்புலமைப் பெருக்குங் கண்டு
பதிவான பெயராகி விளங்கும் வண்ணம்
பண்டிதமா மணியென்னும் பட்டம் தந்தார்27

பலசிறப்புப் பெயரிவர்க்குக் கிடைத்த பின்பும்
பண்டிதர்க்குள் மணியென்னும் பட்டம் மட்டும்
உலகினர்க்குத் தெரிதருமா றுயர்த்திக் காட்ட
ஒளிநல்கும் மணியாகித் தமிழ்நா டெங்கும்
ஒலியெழுப்பும் மணியாகி ஓங்கி நின்றார்;
உவந்தளித்த விருதுக்கு மதிப்பும் தந்தார்;
புலமைக்குக் கிடைத்தபெயர் நிலைக்கும் வண்ணம்
போற்றியதைக் காத்தோம்பித் துலக்கிக் கொண்
டார். 28

தனியரசாய்த் தமிழரசாய் விளங்கி வந்த
தகவுடைய [1] புதுக்கோட்டை மன்னர் தம்மை
இனியதமிழ்க் கல்லூரி தொடங்க வேண்டி
எடுத்துரைத்தார்; கல்விதருங் கூட மெல்லாம்
இனியுரிமை தமிழுக்குத் தருதல் வேண்டும்
வடமொழியை எடுத்தியம்பும் நிலைய மெங்கும்
கனிதமிழைக் கற்பிக்க வேண்டும் என்று
வடமொழியுங் கற்றவர்தாம் சாற்றி வந்தார் 29


  1. புதுக்கோட்டை மன்னர் அப்போது வடமொழிக்கு ஊக்கந் தந்து வந்தார்