பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௪அ

ஊன்றுகோல்


வான்கலந்த மாணிக்க வாச கர்தாம்
வாய்மலர்ந்து பொழிந்ததிரு வாச கத்தைத்
தாங்கலந்து பாடுங்காற் செங்க ரும்பின்
செழுஞ்சாறு வடித்தெடுத்துக் குறிஞ்சி தந்த
தேன்கலந்து பால் கலந்து முற்றி நின்ற
தீங்கனியின் சுவைகலந்து பிறந்து வந்த
ஊன்கலந்தும் உயிர்க்லந்தும் பருகுங் காலை
உவட்டாமல் இனிப்பதுபோல் இன்பங் காண்பார் 12

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வண்ணம்
குளிர்மரங்கள் சூழுமகி பாலன் பட்டி
மேடையிலும் ஒடையிலும் மற்று முள்ள
வீதியிலும் தமையொத்த சிறுவ ரோடும்
ஆடையிலே இவருளத்தைக் கவர்ந்து கொண்ட
அரியதமிழ் மொழிதந்த நீதி நூலின்
பாடலினற் பெறுமின்பம் தழைத்தெ ழுந்து
படர்ந்துவர மெட்யுணர்வாய் மிளிரப் பெற்றார் 13

கொலைகளவு பொய்யொடுகள் காமம் என்ற
குற்றங்கள் தவிர்த்துமனம் தூய்மை யாக்கி,
மலையளவு துயர்வரினும் நெறியில் நின்று
மாறாது மற்றவர்க்குத் துயர்த ராது
நலமருவு செயல்செய்யும் அன்பு பூண்டு,
நம்முயிர்போற் பிறவுயிரை மதித்தல் செய்து,
உலகுபுகழ் மாந்தரென வாழ்தல் ஒன்றே
உயர்சமயம் அச்சமய நெறியில் நின்றார் 14