பக்கம்:எங்கே போகிறோம்.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104 எங்கே போகிறோம்?

நாட்டுப் பசுக்களைவிட, கலப்பினப் பசுக்கள் இளம் வயதிலேயே பருவம் அடைந்துவிடும். கலப்பினப் பசுக்கள் ஆண்டு ஒன்றுக்கு ஒரு கன்று ஈனும். ஆதலால், நாட்டுப் பசுக்களைவிட, கலப்பினப் பசுக்கள் அதிகப்படியான கன்றுகளை ஈனுகின்றன.

கலப்பினப் பசுக்கள் கன்று ஈன்ற மூன்றாவது மாதத்திலேயே சினைப்பட்டு விடுவதால் சராசரி ஆண்டு ஒன்றுக்கு ஒரு கன்று ஈனுகின்றன. அதிகமான கன்றுகளை ஈனுவதோடு மட்டுமின்றி அதிகமான பாலையும் கறந்து தருகின்றன.

ஆதலால், வளர்ப்புக்கு-பொருளாதார ரீதியில் கலப்பினக் கால்நடைகளே நல்லது. கலப்பின மாடுகளைப் பராமரிக்க அதிகக் கவனமும், அக்கறையும், முயற்சியும் தேவை. பயனை நோக்கும்போது இது பெரிதல்ல.

கால்நடை வளர்ப்பில் முக்கியமானது பசுந் தீவனமாகும். தமிழ்நாட்டிலுள்ள கால்நடைகளுக்குத் தற்சமயம் பசுந்தீவனப் பற்றாக்குறை 50 விழுக்காட்டுக்கும் கூடுதல் ஆகும். இந்த விவரம் புள்ளியியல்படியாகும் உண்மையில் இந்த அளவைவிட, பசுந்தீவனப் பற்றாக்குறை கூடுதலாகவே இருக்கும்.

பொதுவாக நமது நாட்டு விவசாயிகள், தங்களுடைய நிலத்தின் ஒரு பகுதியில் கால்நடைகளுக்குப் பயன்படக் கூடிய பசுந்தீவனங்களைப் பயிரிடுவதில்லை; பயிரிட விரும்புவதும் இல்லை.

பொதுவாகக் கால்நடைகளுக்கு, வேளாண்மைக் கழிவுப் பொருள்களையே தீவனமாகத் தருகின்றனர். இவற்றில் பிரதான இடத்தில் இருப்பது வைக்கோல்.