பக்கம்:எங்கே போகிறோம்.pdf/128

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



9. இலட்சிய சமுதாயம்


மானுட வாழ்க்கை தற்செயலாக ஏற்பட்டதும் அல்ல. அஃதொரு விபத்தும் அல்ல. இயற்கை நியதி. திட்டமிட்டுப் பரிணாம வளர்ச்சியில் வாய்த்தது இந்த வாழ்க்க்கை. அற்புதமான ஆற்றல்மிக்க புலன்களுடனும் பொறிகளுடனும் அமைந்தது இந்த வாழ்க்கை.

இப்படி அமைந்ததொரு வாழ்க்கை பயனுடையதாக, புகழ்மிக்கதாக அமைய வேண்டாமா? அமைவுகள் மிகுதியுமுடைய இந்த வாழ்க்கை எதற்காக? அறிவு அறியும் கருவிகள், செயல் செய்யும் பொறிகள் அனைத்தும் அமைந்த வாழ்க்கையின் நோக்கம்தான் என்ன? பயன்தான் என்ன? அறிந்துகொள்ள வேண்டாமா? காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டாமா?

உடம்பொடு உயிர் பொருந்திய நிலையில் வாழ்வுக்கு உயிர்ப்பாக இருப்பது மூச்சுக் காற்று மூச்சுக் காற்று அடங்கினால்-உயிர்ப்பு நின்றால் மரணம். அதனால், உடலில் உயிர்ப்பு நிலை இருக்கும்பொழுதே தகாதனவற்றையெல்லாம் புறத்தே தள்ளி, நல்லன கொள்ள வேண்டாமா? எண்ணுங்கள்! சிந்தனை செய்யுங்கள்!

தேடி, சோறு நித்தம் தின்று, சின்னஞ் சிறுகதைகள் பேசி, வேடிக்கைமனிதராய் மாண்டு போகக் கூடாது. புகழ்மிக்க வாழ்க்கை வாழ்தல் வேண்டும். அதனாலன்றோ, திருக்குறள் அறத்துப்பால்-இல்லறவியலின் முடிவில் ‘புகழ்’ என்று ஓர் அதிகாரம் வைத்தது. புகழ் பெறுதல் என்பது எளிதன்று; இமயத்தின் உச்சியில் ஏறுவதினும் கடினமானது. பேச்சால், எழுத்தால் பாராட்டு