பக்கம்:எங்கே போகிறோம்.pdf/129

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இலட்சிய சமுதாயம் O 127

வரலாம். அது புகழன்று. பதவிகளால் சுற்றி நின்று பயனடைவோர் வானளாவப் புகழலாம். அதுவும் போலியயோம்! விளம்பரம் தான்! புகழன்று!

செயல்வழிச் சாதனைகள் செய்வதுதான் புகழ் பெறுதற்குரிய வழி! அந்தச் சாதனைகளும் கூட நாட்டின் வரலாற்றை நகர்த்துவதாக அமைய வேண்டும்; மானுடத்தை அரித்துத் தின்று அழிக்கும் சாதிப்பிரிவினைகள், கொடிய நோய்கள், வறுமை ஆகியவற்றிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் பணியே புகழ்மிக்க பணி! அதுவே வாழ்க்கையின் குறிக்கோள்! இலட்சியம்!

சென்ற காலத்தில் இலட்சிய வாழ்க்கை வாழ்ந்த சிலர் சாதித்த சாதனைகளாலேயே இன்று நம்முடைய வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும், மனித சமுதாயத்திற்கும் குறிக்கோள் தேவை! இலட்சியம் தேவை! இன்று, இலட்சியம் உடைய மனிதர் களைத் தேடினும் காணக் கிடைப்பதில்லை. ஒரு சிலர், சின்னஞ்சிறு செயல்களையே இலட்சியம் என்று கருதிக் கொண்டுள்ளனர். வேறு சிலர் பணம் சம்பாதிப்பதையே இலட்சியமாகக் கொண்டுள்ளனர்.

கற்றவர்களும் அறிஞர்களும் வீரர்களும் பணம் சம்பாதிப்பதை ஒரு நாளும் வாழ்க்கையின் இலட்சியமாகக் கொள்ளமாட்டார்கள். சின்னஞ்சிறு செயல்கள் செய்வது, பணம் சம்பாதிப்பது இவையெல்லாம் இலட்சியங்கள் ஆகா. வாழ்க்கையின் படிக்கற்கள் என்று வேண்டுமானால், கொள்ளலாம்.

“குறிக்கோள் இலாது கெட்டேன்” என்று பாடுகின்றார் அப்பரடிகள் உடலுக்கு ஆன்மா; மரத்திற்கு வேர்! மனிதனுக்கு இலட்சியம்; வாழ்க்கையில் மனிதன் அடிமையாக இருக்கக் கூடாது!