பக்கம்:எங்கே போகிறோம்.pdf/137

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இலட்சிய சமுதாயம் O 135

கிராமங்கள் தோறும் இளைஞர்கள் நாடக மன்றம் அமைத்து, நல்ல நாடகங்களை எழுதி நடித்துப் பயிலவேண்டும். நிறை நிலா நாளின்போது தவறாமல் இசை நிகழ்ச்சிகளும் நாடகங்களும் நடக்கவேண்டும். மக்கள் வாழ்க்கையைச் சுமையாகக் கருதாமல் நடத்துவதற்குக் கலை, துணைசெய்யும். இசைக்கலையில் பழகிப் பக்குவப்படுபவர்கள் ‘மனிதர்’களாக இருப்பர்.

நமது சமுதாய அமைப்பில் நாடகக் கலைக்கும் பல வகையான இசைக் கலைக்கும் வாய்ப்பு இருக்கிறது. தாலாட்டில் தொடங்கும் நமது இசைக் கலை வாழ்க்கை முழுதும் தொடரவேண்டும். ஓவியமும் சிற்பமும் தமிழகத் திற்கே உரிய கலைகள் இந்தக் கலைகளை மேலும் மேலும் நம்முடைய சமுதாயம் வளர்க்க வேண்டும்.

ஏழிசையை, பண்ணொடு பொருந்திய பாடலை, மக்கள் மாலைப்பொழுதில் மன்றங்கள் தோறும் அனுபவிக்க வேண்டும். பண்ணும் பரதமும் கலந்த கலையை அனுபவிக்க வேண்டும். இந்த மண்ணை விண்ணகமாக்கும் கண்ணன் குழலோசையும் ஆடல் வல்லானின் ஆடற்கலையும் நமது நாட்டின் வழி வழிவந்த கலைகள்! மேலும் சந்தத் தமிழும், சாம கானமும் நமது உரிமைக் கலைகள்! பயிலுவோமாக! வளர்ப்போமாக!

நமது நாடு அரசியலில், ஆட்சியியலில் வளர்ந்த நாடு. மனிதர்களுக்குள் உறவுகளை நிர்ணயம் செய்யும் நோக்கில் அரசியல் தோன்றியது; காலப்போக்கில் ஆட்சி முறை வந்தது! நமது நாட்டை ஆண்ட அரசர்கள் மக்கள் நலம் நாடியவர்கள். அதனால்தான் பிரான்சு, சோவியத் போன்ற நாடுகளில் தோன்றிய புரட்சிகளைப் போல நமது நாட்டில் புரட்சி தோன்றவில்லை. என்றும் நமது நாட்டின்