பக்கம்:எங்கே போகிறோம்.pdf/144

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142 எங்கே போகிறோம்?

தூய்மை வாய்மையால் தெரியும், வாய்மைக்கு ஊற்று இலக்கியம். வாழ்க்கை முழுவதையுமே உருவாக்குவது இலக்கியம்.

“இலக்கியங்களைப் படிப்பதைவிட, படிக்கத்தக்க இலக்கியங்களைத் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம்” என்பான் ஏடு தேடு காதலன் ரஸ்கின். திருவள்ளுவரும் “கற்பவை கற்க” என்றார். இலக்கியங்கள் வாழ்ந்த-வாழ்ந்து கொண்டிருக்கிற சமுதாயத்தின் எண்ணத்தை, சிந்தனைப் போக்கை, விருப்பங்களை, ஆர்வங்களை, குறிக்கோளைக் காட்டுவன. இலக்கு + இயம்= இலக்கியம்.

இலக்கியங்கள் ஒரு குறிக்கோளை நோக்கி மனித சமுதாயத்தை உந்திச் செலுத்துவன. இலக்கியப் பயிற்சி ஓர் உயரிய குறிக்கோளை மனிதனுக்குத் தந்து ஆவேசப்படுத்தவில்லை யென்றால் அவன் அந்த இலக்கியத்தைப் படித்தான்! அவ்வளவுதான்! அவன் அந்த இலக்கியத்தைக் கற்கவில்லை; உணரவில்லை; அனுபவிக்கவில்லை!

“தேர்ந்தெடுத்த சில இலக்கியங்கள் திரும்பத் திரும்பக் கற்கத் தக்கன, அனுபவிக்கத்தக்கன.” என்று பிரான்சிஸ் பேக்கன் கூறினான். தமிழ், இலக்கியவளம் படைத்த மொழி, தமிழிலக்கியங்கள் வரலாற்றுப் பழைமையுடையன. தமிழிலக்கியங்கள் தமிழர் தம் அன்றாட வாழ்க்கையின் படிப்பினைகளாகத் தோன்றியவை.

தமிழிலக்கியங்களில் கற்பனைகளும் புனைவுகளும் அறவே இல்லையென்று கூறலாம். சங்க இலக்கியங்கள் வாழ்க்கையை நெறிப்படுத்தும் ஆற்றலுடையன. காப்பியங்கள் குடும்ப, சமூக, அரசியல் வாழ்க்கைகளை வளர்க்கும் தகையன. திருமுறைகள் அன்பில் நனைப்பன. பாரதி, சுதந்திர தாகத்தைத் தருவான், பாரதிதாசன் புதியதோர் உலகம் செய்யத் தூண்டுவான். இங்ஙனம்