பக்கம்:எங்கே போகிறோம்.pdf/145

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய மேம்பாட்டில் இலக்கியத்தின் பங்கு 143

இலக்கியங்கள் தனிமனித வளர்ச்சிக்கும் சமுதாய வளர்ச்சிக்கும் உதவி செய்வன.

இலக்கியப் பயிற்சி வளர, வளர மனிதன் வளர்வான்; மனித சமுதாயம் வளரும். இளைஞர்கள் இலக்கியம் பயின்றால் இலட்சிய வீரர்கள் ஆவார்கள். இலக்கியம் கற்போம்; இலட்சியத்துடன் வாழ்வோம்!

சங்ககால இலக்கியங்கள் செல்வத்தைத் தேடும் முயற்சிக்குத் தூண்டுகோலாய் இருந்தன. “பொருளே, காதலர் காதல்!” என்று கூறும் அளவுக்கும் பொருள் வேட்கை இருந்திருக்கிறது, ஒவ்வோர் இளைஞனும் திருமணத்திற்கு முன், பொருள் தேடச் செல்லும் பழக்கம் இருந்தது.

ஆடவர் என்றால் அவருக்கு வினையே உயிர் என்று குறுந்தொகை கூறும். “கடவுள் பக்திக்கு அடுத்தபடி முக்கியமான கடமை, அறவழியில் செல்வம் ஈட்டுவதேயாம்” என்று முகமது நபிகள் அருளிச் செய்துள்ளார். வாழ்க்கையின் கருவி, செல்வம். வினை என்ற சொல்லுக்குத் தொழில் என்பதுதான் பொருள். சமய உலகம் வேறு பொருளைக் கற்பிக்கிறது. அதனை மறந்து விடுக! ஆடவர், உயிருடன் வாழ்வதற்கு அடையாளம் அவர் செய்யும் தொழிலே, நியாயமான முறையில் பொருளிட்டும் தொழிலில் எதுவும் தாழ்ந்ததல்ல.

செய்யும் தொழிலைச் சிரத்தையுடன் செய்யவேண்டும். சாவதற்கு அஞ்சி உயிர்காத்துக் கொள்வது போலத் தொழிலைச் செய்யவேண்டும். “ஒழுக்கம் உயிர்”-என்று வள்ளுவம் கூறியதைப் போல், குறுந்தொகை வினையே ஆடவர்க்கு உயிரே என்கிறது, ஆம் தொழில் செய்து பொருளிட்டி வாழ்தலே ஒழுக்கம்; இந்த ஒப்புமை சரியானதே!