பக்கம்:எங்கே போகிறோம்.pdf/164

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162 எங்கே போகிறோம்?

ஒரு செடியிலிருந்து மணமுள்ள மலர், ஆரவாரமின்றி, முகிழ்த்து வெளி வந்து, எல்லோரும் மணத்தை அனுபவிக்கும்படி, மணத்தைப் பரப்புவதைப் போல, ஆன்மாவில் அன்பாக, அருளாக, தியாகமாக, சந்தடியின்றி, ஆரவாரமின்றி முகிழ்த்து, வாழ்வித்து வாழ்வது ஆன்மிகம்.

ஆன்மிகம் மற்றவர்களுக்கு உதவுவதில் முந்தும்; ஆறுதல் தரும். ஆன்மிகம் பயத்திற்கு அப்பாற்பட்டது; ஆளுமை உடையது. விசாலமான இதயம் உடையது. உறுதியும், உண்மையும் உள்ள உள்ளம், விருப்பத்துடன் வேலை செய்யும் பண்பு இவையே ஆன்மிகத்தின் அடையாளங்கள். இறைவன் கற்கோயிலில் எழுந்தருளுவதைவிட, மனக்கோவிலில் எழுந்தருளுவதையே விரும்புகின்றான். இறைவனை, “உடலிடங் கொண்டாய்”, “மனத்தகத்தான்” என்றெல்லாம் திருமுறைகள் போற்றும். கற்கோயிலை விட மனக்கோயிலிலேயே இறைவன் எழுந்தருளுகின்றான் என்பதற்கு பூசலார் நாயனார் வரலாறே சான்று.

எந்த மனிதனிடம், சாந்தம், சத்தியம், புலனடக்கம், துணிவு, சமபுத்தி உள்ளனவோ, அந்த மனிதனே ஆன்மிகத்தில் சிறந்தவன். இத்தகைய மனிதரால், இவ்வுலகில் கோடிக்கணக்கான குலங்கள் வளரும்; வாழும். அவர்களின் உடலிலேயே இறைவன் குடி கொண்டு, அவர்களின் மூலம் தன் விருப்பத்தைக் கடவுள் நிறைவேற்றிக் கொள்ளுகின்றான். அதனால், எல்லாவற்றையும், உன்னைப் போலவே உன் ஆன்மாவைப் போலவே காண்க.

ஆன்மிகம் விலை மதிப்பிட முடியாத ஒரு செல்வம். ஆன்மிகத்தில் செழித்தவர்கள் முகத்தில் ஒரு பொலிவு—புன்முறுவல் தோன்றும்; பரிவு வெளிப்படும்; பண்பாடு இருக்கும். ஒருவன் ஆன்ம சக்தி உடையவன் என்பதை அவனுடைய ஒவ்வொரு அசைவிலும் காணலாம்.