பக்கம்:எங்கே போகிறோம்.pdf/166

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154 எங்கே போகிறோம்?

என்றார் தாயுயுமானார். இதுவே ஆன்மிகத்தின் குரல். இந்த குரல் இன்று இந்தியாவிலேயே ஒலிக்கவில்லை. தமிழகத்திலேயே ஒலிக்கவில்லை. நாளும் திருக்கோயில்கள் பெருகி வளர்கின்றன; திருவிழாக்கள் நடக்கின்றன; குடமுழுக்கு விழாக்கள் நடக்கின்றன. ஆனால் இவையெல்லாம் மனிதநேயம், தாழ்வெனும் தன்மை நோக்கிச் சமயம் சாரும் இயல்பைத் தந்தனவா? வறுமை, சிறுமைகளிலிருந்து தப்ப வழி வகை கற்றுக் கொடுத்ததா?

மானுடப்பதம் தந்து வாழ்வளித்த வள்ளற்பெருமானாகிய இறைவனிடமே இரவலனாகத்தானே மனிதன் செல்கின்றான்? திருக்கோயிலிலும் போட்டா போட்டிகள்! மரியாதைகள்! சாதிப்புன்மைகள்! பணத்தின் திருவிளையாடல்கள்!

எங்கே பழங்காலத் திருக்கோயில்களைச் சார்ந்து வளர்ந்த ஆன்மிகம்? நாயன்மார்களும், ஆழ்வார்களும் வளர்த்த ன்ன்மிகம் எங்கே? சராசரங்கள் எல்லாம் சிவம் பெருக்கிய சீலம் எங்கே? “எந்நாட்பவர்க்கும் இறைவா” என்ற உலகம் பொதுமை தழுவிய மாணிக்க வாசகரின் ஆன்மிகம் எங்கே? “தொண்டலால் உயிர்க்கு ஊதியம் இல்லை” என்றவாறு தொண்டு நெறியில் வளர்ந்த ஆன்மிகம் எங்கே?

“பலர் வைகுந்தத்திற்குப் போக நான் நரகத்திற்குப் போகச் சித்தமாயுள்ளேன்” என்று மதில் மேல் ஏறி, இறைவன் நாமத்தை எடுத்து ஓதிய இராமானுசரின் ஆன்மிகம் எங்கே? “சேர வாரும் செகத்திரே” என்று, வேறுபாடின்றி அனைவரையும் அழைத்த ஆன்மிகம் எங்கு போயிற்று? தேடுங்கள்!

ஆன்மாவின் வழி வாழக் கற்றுக் கொள்ளுங்கள்? எவ்வுயிரும் தம்முயிர் போல் போற்றும் பெருநெறி கடைப்பிடித்து ஒழுகுங்கள்! வல்லார்க்கும், வல்லமை இல்லாதாருக்கும், ஒரு சேர வாழ்வளியுங்கள்! உயிர்க்குலம் –