பக்கம்:எங்கே போகிறோம்.pdf/177

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போக வேண்டும்? 175

உடன்பாடிலாதவரிடம் கூடப் பகை கொள்ளவேண்டாம். பகை இல்லையேல் போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது. நாமும் பகையின்றி, பண்பு பாராட்டி, உறவு கொண்டு. வாழ்வோம்! யாரோடும் உறவு எவரோடும் ஒப்புரவு! இவை நமது வாழ்க்கை நெறிகளாகட்டும் பழமையின் சாரம் ஏற்போம்! பழமை வித்து!

பழமை இன்றையத் தலைமுறைக்கு உணவாக இயலாது. ஆனால் ஊட்டமேற்றும் உரமாகும். புதுமை படைப்போம்! புதியதோர் உலகைச் செய்வோம்! சாதிகளை அகற்றுவோம்! குலம், கோத்திரங்களை மறப்போம்! ஒன்றே குலம்-ஒருவனே தேவன் என்போம்! புவியை நடத்துவோம்! பொதுவில் நடத்துவோம்! மனிதகுல சமநிலை காண்போம்! மார்க்சியம் கற்போம்! வள்ளுவம் கற்போம்! இவ்விரண்டு தத்துவங்களும் இணைந்த சமுதாயம் காண்போம்!

எல்லோருக்கும் எல்லாப் பெருஞ் செல்வமும் அடையும் படி செய்வோம்! வல்லாருக்கும் மாட்டாருக்கும் ஒருங்கே வாழ்வளிப்போம்; ஒத்தாரும், உயர்ந்தாரும் தாழ்ந்தாரும், எவரும் ஒருங்கிணைந்து உலகியல் நடத்துவோம்! கணியன் பூங்குன்றன் வழி, பெரியோரை வியத்தல் செய்வோம்! சிறியோரை இகழ்தல் அதனினும் இலம்! நாளும் புதியன கற்போம்! புதியன படைப்போம்! இன்றைய பணிகளை, இன்றைய கருவிகளைக் கொண்டே செய்வோம்! இல்லாதவர் இல்லை என்று செய்வோம்! -

அப்பரடிகள் கூறியவாறு, “இன்பமே எந்நாளும்—துன்பமில்லை” என்று வாழ்வோம்! இந்த மண்ணில் விண்ணரசு காண்போம்!