பக்கம்:எங்கே போகிறோம்.pdf/179

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போக வேண்டும்? 177

அடையாள அட்டை அவசியப்படுமா? நம்முடைய தவறுகள்தானே அடையாள அட்டை கேட்கும்படியாகச் செய்து விட்டது?

சுதந்திர ஜனநாயக ஆட்சியில் எல்லோரும் வாக்களிப்பது கடமை. இதில் தவறக்கூடாது. சுதந்திர நாட்டின் குடிமக்கள் அனைவரும் நாட்டின் வளர்ச்சிக்குரிய பணிகளில் ஈடுபட உரிமை உண்டு. ஈடுபடவும் வேண்டும். அவரவர் நிலைக்கு ஏற்பத் தாம் வாழும் ஊரின் நலனுக்கும், மேம்பாட்டுக்குமுரிய பணிகளிலாவது ஈடுபட வேண்டும். அதுவும் இயலாது போனால் குறைந்த பட்சம் ஊரின், சமூகத்தின் நலனுக்கு ஊறு விளைவிக்காமலாவது வாழ்தல் வேண்டும்.

சமூக ஒற்றுமைக்கு விரோதமாக, கோள் சொல்லுதல், சிண்டு–முடிந்துவிடுதல் போன்றவற்றைத் தவிர்த்து விடுதல் வேண்டும். ஊரைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். வீதிகளில் குப்பைகளைப் போடுதல், கழிவு நீர்களை விடுதல் தவறு. பசுமையான மரங்களை வெட்டக் கூடாது. இங்ங்ணம் நல்லன அல்லாதவற்றைச் செய்வதைத் தவிர்த்தாலும் ஊர் வளரும் வாழும்!

ஒரு சுதந்திர நாட்டின் குடிமக்களுக்கு சமூக, பொருளாதார அறிவு தேவை. இவற்றைக் கற்றுக் கொள்ள அனைவரும் முன்வர வேண்டும்! அரசியல், சமூக, பொருளாதார அறிவினை மக்கள் மன்றத்தில் வளர்க்க, இளைஞர்கள் வகுப்புக்கள் மூலம் அரசியல் அறிவை, பொருளாதாரச் சிந்தனையை வளர்க்க வேண்டும்.

ஜனநாயக வாழ்க்கை என்பது தேர்தலுக்கு மட்டுமல்ல. ஜனநாயகம் என்பது ஒரு வாழ்க்கை முறை.