பக்கம்:எங்கே போகிறோம்.pdf/180

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178 எங்கே போகிறோம்?

ஜனநாயக வாழ்க்கை முறை தனிமனிதனின் சுய விமர்சனத்தாலும், கூட்டாகப் பலர் செய்யும் விமர்சனத்தாலும் வளரும், ஆனால் மற்றவர்கள் செய்யும் விமர்சனம் உள்நோக்கம் கொண்டதாக இல்லாமல், உண்மையில் நாட்டு நலனில் அக்கறை கொண்டதாக அமையவேண்டும். “செவி கைப்பச் சொற் பொறுக்கும்” பண்பு, ஜனநாயக வாழ்க்கைக்கு, கூட்டு வாழ்க்கைக்கு, இன்றியமையாததாகும்.

ஜனநாயக வாழ்க்கை முறையின் ஆணிவேர் கட்சிகள். தவிர்க்க இயலாத தேவைகள். இந்த அமைவுகள் அதிகார வேட்கை உடையனவாகவும், ஆதிபத்திய ஆசை உடையனவாகவும், பொருளாசை உடையனவாகவும் இருத்தல் கூடாது. நாட்டுக்குத் தொண்டு செய்வதையே குறிக்கோளாகக் கொண்ட கொள்கை அணிகளாக அமைய வேண்டும். அக்குறிக்கோளை அடையும் நெறிமுறைகளிலேயே கருத்து வேறுபாடுகள்!

ஆதலால், உள்நோக்கமும், பகையுணர்வும், ஆட்சி அதிகாரத்தில் பிடிப்பும் உடைய அமைப்புக்களால், கட்சிகளால், நாட்டுக்குப் பயன் விளையாது. சட்டசபை, பாராளுமன்ற விவாதங்களில் சூடு இருக்கலாம். நாட்டில் சூடு இருத்தல் அறவே கூடாது. நல்ல ஜனநாயகப் பண்பு, பிறர் வாய்க் கேட்கும் ஆர்வத்தைத் தூண்டும். யாரோடும் பகை கொள்ளாத பண்பாடே வெற்றி தரும்.

வாழ்க்கை குறிக்கோளுடன் அமைக்கப் பெற்றது என்பது வாய்த்திருக்கும் கருவிகளைப் பொருத்தே உணரப்படும் உண்மை. மானுடம் ஒரு பிறவி. மானுடம் வெற்றி பெற வேண்டும். வெற்றி பொருந்திய வாழ்க்கைக்குக் குறிக்கோள் தேவை. குறிக்கோள் இமயம் போல உயர்ந்ததாக இருக்கவேண்டும். யானையைக் குறி வை! அடிபடு