பக்கம்:எங்கே போகிறோம்.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுதந்திர தின விழாச் சிந்தனைகள் 17

அப்படிப்பட்ட புரட்சி எண்ணத்தை நாட்டு மக்களுக்குக் கொடுத்தாக வேண்டும். மக்களை அரசு காப்பாற்றக் கூடாது. அரசை மக்கள் காப்பாற்ற வேண்டும்.

ஜனநாயகம் என்பது ஒருமுறை மட்டுமல்ல அது ஒரு வாழ்க்கை முறை. அது உணர்வு செறிந்தது. ஒழுங்கு செறிந்தது. ஒழுக்கம் செறிந்தது. இன்று எங்கு பார்த்தாலும் போட்டா போட்டிகள்! தலைமைக்கும் பெருமைக்கும் போராட்டங்கள்! இலட்சியத்தைப் பறிகொடுத்து விட்டுக் கூட பெருமை தேடுவார்கள் போலத் தெரிகிறது. இலட்சியம் பெரிது. இலட்சியம் தூய்மையானது. இலட்சிய வாழ்க்கை உயர்ந்தது. பதவிகளும், பெருமையும் வரலாம்-போகலாம். இலட்சியத்தைத் தியாகம் செய்துவிட்டுத் தயவு செய்து பதவிகளைத் தேட வேண்டாம். பெருமைகளைத் தேடவேண்டாம்.

இளைய பாரதமே! எழுந்திரு! புதிய பாரதமே! எழுந்து வா; உனக்குத் தேவையான கல்வி எது என்று நிர்ணயம் செய்! தற்சார்பான கல்வியைப் பெறு! வேலையைத் தேடாதே வேலையை உருவாக்கு கை வருந்தி உழைப்பவர் தெய்வம் என்று நம்பு நோம்பு நோற்று உழைத்து வாழ்க! புதிய வரலாறு படைத்திடுக! வரலாற்றுப் போக்கோடு ஓடி விடலாம் என்று நினைக்காதே! நீ வரலாற்றை நிகழ்த்தி, நின்று. போராடிப் புதிய வரலாற்றைப் படைத்து சாதனை செய்! உன்னுடைய காலம் இந்த நாட்டினுடைய வரவலாற்றில் பொன்னேடாக அமைய வேண்டும்.

எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? அன்பு கூர்ந்து சிந்தனை செய்யுங்கள். இன்று இந்த நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது? எங்குப் பார்த்தாலும் வன்முறைகள்! மொழிச் சண்டைகள்! சாதிச் சண்டைகள்! மதச் சண்டைகள்! ஏதோ ஒன்றைத் தேடிக் கொண்டு. அவல மனத்தோடு அலைந்து கொண்டிருக்கிறார்கள்.