பக்கம்:எங்கே போகிறோம்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20 எங்கே போகிறோம்?

அறிவியல், நாட்டுக்கு இன்றி அமையாதது. அறிவியலும், ஆன்மிகமும் முரண்பட்டதல்ல. ஆன்மிகமும் ஒரு அறிவியல்தான். அறிவியல் என்பது வளரும் உலகத்தை, நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை, நம்மைச் சுற்றியிருக்கக் கூடிய சமூகத்தை, நமக்குப் பயன்படுத்திக் கொள்வது, வளர்ப்பது, வாழ்வது, என்பதுதான். நம்முடைய பொருளாதாரம் செழிப்பாக இருக்கவேண்டும். கடன் வாங்கிய காசு கையில் புரளலாம். ஆனால் சொந்தமாகாது. நம்முடைய நாட்டினுடைய சொந்த மூலாதார வளங்கள் பெருகி ஆக வேண்டும். நம்முடைய மூலதனம் பெருகவேண்டும், பன்னாட்டு மூலதனங்களைவிட, சொந்த மூலதனம்தான் தேசத்தின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும். என்பதை மறந்து விடாதீர்கள்!

எல்லோரும்தான் பிறக்கிறார்கள், எல்லோருக்கும் ஒரே ஒரு முறைதான் பிறப்பு. ஆதலால் மீண்டும் பிறக்கப் போவது நிச்சயமில்லை. ஆதலால், இலட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அந்த இலட்சியம் எதுவாக இருக்க வேண்டும்? நம்முடைய நாடு, நம்முடைய காலத்தில், நாடா வளத்தனவாக விளங்கவேண்டும். தாழ்விலாச் செல்வர் பலர் வாழவேண்டும், வளரவேண்டும். இந்த நாட்டை, இமயம் முதல் குமரி வரையில் ஒரு நாடாக ஆக்குவோம்! கூட்டுவாழ்க்கை வாழ்வோம்! கூடிவாழ்தல் என்பது ஒரு பண்பாடாக இருக்கவேண்டும்.

ஜனநாயக மரபுகளைக் கடைப்பிடிப்போம் என்பது எல்லாம், இந்தநாட்டு வாழ்க்கை நெறியில், முறையில், உயிர்பிக்கவேண்டும். அன்பு நெறி இந்த நாட்டு நெறி; உலகத்தின் மிகப்பெரிய சமயமான புத்த மதத்தைக் கொடுத்தது இந்தியா-மறந்து விடாதீர்கள். போர்க் களத்தைவிட்டு விலகினான் அசோகன். உயர்ந்த அன்பு நெறியை இந்த நாடு ஒரு காலத்தில் போற்றியது. பாராட்டியது. இன்று இந்த நாட்டில் எங்குபார்த்தாலும்