பக்கம்:எங்கே போகிறோம்.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26 O எங்கே போகிறோம்?

என்பது திருக்குறள். இத்தகு அறிவைப் பெறும் கல்வி வழங்கப் பெறுகிறதா? இன்று நமது கல்வி உலகம் எங்கு போய்க் கொண்டிருக்கிறது? பட்டதாரிகளை உருவாக்குவதில் கல்வி உலகம் வெற்றி பெற்றிருக்கிறது.

ஆனால், படைப்பாளிகளை உருவாக்குவதில் பெற்ற வெற்றி, மிக மிகக் குறைவு! கல்வியே அறிவுடைமையல்ல. கற்றவர்கள் எல்லாம் அறிவுடையவர்களும் அல்லர். கல்வியும், கேள்வியும் அறிவு பெறுதலுக்குரிய வாயில்களே ஆகும்!

இன்று நமது கல்வியுலகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது? மனிதனின் ஆன்மாவுக்கு உணவு கல்வி. ஆன்மாவை வளர்ப்பது கல்வி! இன்றைய கல்வி முறை மூளையில் தகவல்களைத் திணிப்பதாக அமைந்திருக்கிறதே ஒழிய ஆன்மாவைத் தொடவில்லையே! இன்றுள்ள கல்விப் பெருக்கத்திற்கு, இக்கல்வி உலகம், அளப்பரிய ஆற்றல் வாய்ந்த கல்வியாய் இருப்பின், இந்த உலகத்தையே மாற்றியிருக்கும்.

எங்கே மாற்றங்கள்? மனிதன் வர வரச் சூழ்நிலையின் கைதியாகிப் போகிறானே தவிர, சூழ்நிலையை அவன் மாற்ற முற்படவில்லையே! விலங்குகள் சூழ்நிலையைச் சார்ந்தவை. ஆனால், மனிதனோ சூழ்நிலைகளைத் தன்னுடைய வாழ்நிலைக்கும், இலட்சியத்துக்கும் ஏற்ப, மாற்றி அமைத்துக் கொள்ளும் ஆற்றலுடையவனாக விளங்குமாறு செய்தல் கல்வியின் விழுமிய நோக்கம், இன்றைய கல்வி உலகு, கடமை உணர்வுகளை, காலம் போற்றும் உயர் பண்பினை, கட்டுப்பாடுகளைப் போற்றி வளர்த்துக்கொள்ளக் கற்றுத் தரவில்லை. வெற்றி வாய்ப்புகளுக்குரிய கட்டுப்பாடுகளை நெகிழ்த்தி விட்டது இன்றைய கல்வி உலகம். ஏன்?