பக்கம்:எங்கே போகிறோம்.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40 எங்கே போகிறோம்?

நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களின் உழைப்பில்-எண்ணற்ற உயிர்த் தொகுதிகளின் உழைப்பில் வாழ்கிறோம். நாம் நமது ஒருநாள் வாழ்க்கைக்கு என்னென்ன தேவை என்று கணக்கிட்டால் நாம் இந்த உலகத்தில் மற்றவர்கள் அல்லது மற்றவை உழைப்பிலிருந்து நமது வாழ்க்கைக்கும் நுகர்வுக்கும் எவ்வளவு எடுத்துக்கொள்கிறோமோ அவ்வளவுக்காவது நாம் திருப்பித் தரும் வகையில் உழைக்கின்றோமா? பலர் வாழ்க்கையில் இல்லை என்பதே விடையாக இருக்கிறது.

அப்படியானால், உழைக்காது வாழ்பவர்கள் பிறர் பங்கைத் திருடுகிறார்கள். அல்லது பிறருக்கு சுமையாக இருக்கிறார்கள். இவர்கள் நிலத்திற்கும் பாரம் இவர்களை வையகம் சுமப்பதும் வம்பு. அதாவது பயனற்றவர்கள்.

தனக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பைவிடத் தன்னுடைய உழைப்பின் மதிப்பை உயர்த்திக் காட்டும் மனிதன்தான் சமூகத்திற்குப் பயன்படுவான். சமூகத்தில் ஒரு நிலையான இடத்தை முன்னேறிப் பெறுவான். இதுவே வாழும் நியதி.

ஆழ்கடலின் மேலே புல் பூண்டுகள் மிதக்கும், செத்தைகள் மிதக்கும். ஆனால், முத்து ஆழத்தில்தான் கிடக்கும். முத்தை விரும்புவோர் ஆழ்கடலில் மூச்சடக்கி மூழ்கித்தான் முத்தை எடுக்கவேண்டும். அதுபோல, வாழ்க்கையில் அரும்பயனையும் வெற்றியையும் விரும்புவோர் உழைத்தல் வேண்டும்.

உடம்பு, உழைப்பினாலாயது. உழைப்பதற்கே உரியது. இரும்பு, பயன்படுத்தப் பயன்படுத்த உறுதிப்படும். நீண்ட நாட்களுக்கும் பயன்படும். உழைப்பில் பயன்படுத்தப்படாத இரும்பு துருப்பிடித்து அழியும்;