பக்கம்:எங்கே போகிறோம்.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உழைப்புச் சிந்தனைகள் O 41

விலை மதிப்பையும் இழக்கும். இரும்பு துருப்பிடித்து அழிவதைவிட, உழைப்பில் பயன்படுவதன் மூலம் தேய்வதே மேல்.

மனிதராய்ப் பிறந்தோர் எல்லாரும் விரும்புவது மகிழ்ச்சி! மகிழ்ச்சியை எளிதாக அடைவதற்குரிய ஒரே வழி-மிகவும் இரகசியமான வழி-கடுமையாக உழைத்தலேயாம். அந்த மகிழ்ச்சியும் ஒரொருகால் உழைத்தலினால் கிடைக்காது. இடையீடின்றித் தொடர்ந்து உழைக்க வேண்டும்.

மனித குலத்தை வறுமைத்தீ சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தீயை அணைப்பதற்குரிய முயற்சியுடன் கடின உழைப்புத் தராவிடில் இந்தத் தீ அணையாது. இந்தியாவை, கடந்த பல நூறாண்டுகளாகப் பசித்தீ உள்ளீடழித்து வருகிறது.

பொதுவாக ஆண்கள் மத்தியில், அவர்களைப் பார்த்துப் பெண்கள் நகைப்பதைத் தாங்கிக்கொள்ள மாட்டார்கள். கோபம் வந்துவிடும். ஆனால் ஒரு பெண் பல நூறு ஆண்டுகளாக தொடர்ந்து பரிகாசம் செய்து நகைத்துக்கொண்டே இருக்கிறாள். சூடு சுரணை வந்ததாகத் தெரியவில்லை. இனிமேலும் வருமா? வராது போனால் இந்தியா வளமான நாடாகாது. 2001-ல் புதிய நாட்டைக் காண்பதும் அரிது.

அந்தப் பெண் யார்? அவள்தான் நிலமென்னும் நல்லாள் தன்னிடம் ஒன்றுமில்லை என்று எண்ணிச் சோம்பலுடன் அயர்ந்து-செயலற்று இருப்பவர்களைப் பார்த்து நிலமென்னும் நல்லாள் நகைக்கின்றாள்! ஆம்! நமது நாட்டில் கோடிக்கணக்கான ஏக்கர் நிலம் தரிசு. பசுமைப் புரட்சிக்கு இலக்காகாத தரிசு. ஏன் இந்த அவலம்?

எ—3