பக்கம்:எங்கே போகிறோம்.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42 எங்கே போகிறோம்?

உழைப்பும் சுறுசுறுப்பும் இணையானவை. சுறு சுறுப்பு, உழைப்பைத் தூண்டும். ஆனால், சிலர் சுறு சுறுப்பாக இருப்பர் முறையாக உழைக்க மாட்டார்கள். இவர்களுடைய சுறுசுறுப்பினால் என்ன பயன்? யாதொரு பயனும் இல்லை. அதுமட்டுமல்ல. எதைச் செய்வதில், எதைச் சாதனையாக மாற்றுவதில் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

“வேலை செய்வது கடினம், ஆனால், எந்த வேலையும் கடினமன்று”- என்பது ஒரு சைப்ரஸ் பழமொழி. வேலை செய்வது கடினமல்ல. வேலை செய்ய விருப்பம் இல்லாததால் வேலை கடினமாகத் தோன்றுகிறது.

ஆனால், ஆர்வத்துடன் அறிவறிந்த ஆள்வினையின் மூலம் எந்த வேலையையும் எளிதாகச் செய்து முடிக்க முடியும், ராபர்ட் புரூஸ் என்ற அரசன் கதையை எடுத்துக் கொள்ளுங்கள். பலமுறை போர்முனையில் தோற்றான். கடைசிப் போரில் தோற்று ஒரு குகையில் ஒளிந்திருந்தான்.

அந்தக் குகையில் ஒரு சிலந்தி, வலைபின்னிக் கொண்டிருந்தது. அடிக்கடி சிலந்தியின் பின்னலில் நூலிழை அறுந்து போயிற்று. ஆனால், சிலந்தி விடவில்லை. மீண்டும் மீண்டும் தொடர்ந்து வலை பின்னும் முயற்சியில் வெற்றி கண்டது,

இதனைக் கவனித்த அரசன் ராபர்ட் புருஸ், எழுச்சி பெற்றான். போருக்கு ஆயத்தமானான்; போரிட்டான்; வெற்றியும் பெற்றான். அதுபோல் தொடர்ச்சியாக நடைபெறும் உழைப்பு, வெற்றியை ஈட்டித் தரும்.

இன்று வேலை செய்யும் நேரத்தைவிட, ஓய்வு, இளைப்பாறுதல் - இந்த வகையில்தான் அதிக நேரம்