பக்கம்:எங்கே போகிறோம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54 O எங்கே போகிறோம்?

பொருள். ஒரே வழி பழமைவாதிகள் தங்களுடைய அறியாமையை மறைத்துக்கொள்ளப் புதிய சிந்தனையை புதியவற்றை எதிர்ப்பார்கள்.

கிரேக்க ஞானி சாக்ரட்டிஸ், கலீலியோ, ஏசு பெருமான், அப்பரடிகள், வள்ளலார் ஆகியோர் வரலாறுகள் இதற்குச் சான்றாகும். ஆனாலும் அவர்கள் கண்ட புதுமைதான் வென்றது.

அறிவு வளரும்போதே, ஆன்மாவும் ஒருங்கிணைந்து வளரவேண்டும். ஆன்மாவை வளர்த்துப் பேணிக்காக்கும் அறிவே, அறிவு. ஆன்மாவுக்குத் தொடர்பில்லாத அறிவு, வளர்ச்சிக்குத் துணை செய்யாது; மாற்றங்களுக்கும் காரணமாக அமையாது.

சிந்தனையில் வளர்ச்சி, அறிவில் வளர்ச்சி, அறிவிய லில் வளர்ச்சி, வாழ் நிலையில் வளர்ச்சி, சமூகத்தில் வளர்ச்சி இவையெல்லாம் ஒருங்கிணைந்த நிலையில் நிகழுமாயின் மாற்றங்கள் ஏற்படும்.

வளர்ச்சியும் மாற்றங்களுமே மனிதகுல மேம்பாட்டுக்கு உந்துசக்திகள். மனிதன் பழக்கங்களுக்கும் வழக்கங்களுக்கும் அடிமைப்படுதல் கூடாது.

நாளும் மனிதன், புத்துயிர்ப்புப் பெறவேண்டும்; புது மனிதனாகப் பிறப்பெடுக்க வேண்டும். மனிதன் உழுத காலிலேயே உழுது கொண்டிருக்கும் வரை, நிலம் வளம் அடையாது.

அதுபோலவே படித்த சுலோகங்களையும் கோஷங்களையும் திரும்பத் திரும்பப் பிடிவாதமாகச் சொல்லிக் கொண்டிருந்தால் வளர்ச்சி பாதிக்கும். வளர்ச்சி பாதிப்பதன் மூலம், மாற்றங்களும் ஏற்படாது.