பக்கம்:எங்கே போகிறோம்.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வளர்ச்சி-மாற்றம் 37

மத நிறுவனங்கள் அனுட்டானத்தைவிட, பிரச்சாரப் புயலில் சிக்கித் தவிக்கின்றன. நாடோ, ஊரோ, வீடோ இன்று ஒன்றாக-ஓருருவாகவில்லை. கிராமத்தின் எல்லையில் நம்மை வரவேற்பது பசுமையும், இலைகளும், பூக்களும் நிறைந்த மரங்கள் அல்ல. கட்சிக் கொடிகளே வரவேற்கின்றன. அரசியற்கட்சிகளின் கொடிகளும் அல்ல.

உள் அமைப்பு ஜனநாயகத்தையும், வளர்ச்சியையும், மாற்றத்தையும் உத்தியாகக் கொள்ளாது தேக்கமடைந்ததால் ஏற்பட்ட கோப தாபங்களால் பிரசவிக்கப் பெற்றவைகளே இன்றுள்ள பெரும்பான்மையான கட்சிகள்.

மதவாதிகள் மட்டமா, என்ன? தெருவுக்கு ஒரு கோயில்! சாதிக்கு ஒரு சாமி! இவை எல்லாமாக ஒன்று சேர்ந்து வாழ்க்கையில் தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளன; வளர்ச்சிக்குக் குந்தகம் செய்கின்றன; மாற்றங்களுக்குத் தடையாக உள்ளன.

அருமைப் பெரியோர்களே! இளைய பாரதத்தினரே! இந்தப் பாதையில்தான் நாம் தொடர்ந்து, செல்ல வேண்டுமா? வேண்டாம் வேண்டாம் வளர்ச்சியும் மாற்றமும் பொருந்திய பாதையில் செல்ல அடியெடுத்து வைப்போம் நடப்போம்! தொடர்ந்து நடப்போம்!

மனிதன் மாறாவிட்டால் இந்த உலகில் வளர்ச்சி இல்லை. மாற்றங்களும் நிகழா. பல நாடுகளில் இன்னமும் வளர்ச்சியடையாத மாந்தர்கள் உள்ளனர். அதற்குக் காரணம் மனிதர்களின் மாற்றத்திற்குரிய பணிகளில் ஈடுபடும் அறிஞர்கள் தோன்றவில்லை.

ஒருவகையில் இந்தியா புண்ணியம் செய்த பூமி! இங்கு, சிந்தனையாளர்கள் பலர் தோன்றித் திரும்பத்

எ—4