பக்கம்:எங்கே போகிறோம்.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70 எங்கே போகிறோம்?

ஆதலால் ஆளுக்கு ஒரு வாக்குச்சீட்டு என்பது சுதந்திரம் அல்ல. குடிசையில் வாழும் குப்பனும் தனது வாக்கை என்று பரிபூரண சுதந்திரத்துடன் பயன்படுத்துகின்றானோ அன்றுதான் சுதந்திரம் வந்ததாகப் பொருள். இன்று இந்தியாவைப் பற்றியுள்ள வறுமை, ஏழ்மை, சொல்லும் தரத்ததன்று. ஆனாலும் படிப்படியாகக் குறைந்து வருகிறது.

நமது நாட்டில் வறுமை, நகர்ப்புறங்களிலும் உண்டு. ஆயினும் கிராமப்புற வறுமை மிக மிகக் கொடியது. இதில் கவனிக்க வேண்டிய ஒன்று-கிராமப்புற வறுமையை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. நகர்ப்புற வறுமையாளர்கள் போராடும் இயல்பினர்.

கிராமப்புற மக்கள், வறுமையை இயற்கை என்று கருதி, அந்த வறுமையுடனேயே வாழ்வதில் பழகிப் போய் விட்டனர். ஆதலால் கிராமப்புற வறுமையாளர்களிடையில் “போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்ற பழமொழிக்கு நல்ல செல்வாக்கு உண்டு.

இந்த மனப்போக்கு, பொருளாதார வளர்ச்சிக்குத் துணை செய்யாது. வறுமை என்பது வசதிகள் அற்ற வாழ்க்கை. ஏழ்மை என்பது உணவுக்குப் போராடும் நிலை. நமது நாட்டில் பலர் வறுமையில் வாழ்கின்றனர். ஏராளமான கிராமப்புற மக்கள் ஏழ்மையில் கிடந்து உழல்கின்றனர்.

இதில் வருத்தம் என்னவெனில், வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளாகிய நுகர் பொருட்கள் உணவுப் பொருள்களை கிராம மக்களே உற்பத்தி செய்கின்றனர். ஆனால் அவர்கள் உற்பத்திப் பெருக்கத்தின் காரணமாக் ஏற்படும் விலை வீழ்ச்சியினாலும், பணத் தேவையினாலும் ஏழ்மைக்கு ஆளாகிறார்கள். நெல்லை உற்பத்தி