பக்கம்:எங்கே போகிறோம்.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96 O எங்கே போகிறோம்?

பழம், காய்கறிகளை அழுகாமல் பாதுகாக்கும் வசதிகள் உற்பத்தியாகும் தலங்களில் இல்லை. நெல்லும் கூடப் போதிய பாதுகாப்புச் செய்யப் பெறாமல் பலலட்சம் டன்கள் வீணாகின்றன.

வேளாண்மைப் பொருளாதாரத்தில் சீரான நிலை, நிலவ வேண்டுமானால் மற்றப் பொருள்களுக்குப் போல, உற்பத்தி செய்பவர்களே, விலை நிர்ணயிப்பவர்களாக இருக்க வேண்டும்.

உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும் இடையில் இடைத்தரகர் இல்லாமல் இருப்பது நல்லது. தவிர்க்க இயலாது எனில், தரகர்களின் எண்ணிக்கையையாவது குறைக்க வேண்டும். அப்போதுதான் விலைகுறையும்: விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரும்.

நமது நாடு, காய்கறி உற்பத்தியிலும் பற்றாக்குறையுடையதேயாகும். அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதும் கூடக் காய்கறியே என்பதை மறந்து விடக் கூடாது. ஒரு ஏக்கரில் காய்கறி சாகுபடி செய்ய ரூ 1100 செலவாகும்; ஆனால் வரவு ரூ 4750 ஆகும். தண்ணீர்த் தேவையும் குறைவே. பராமரிப்பில் மட்டுமே அக்கறை தேவை.

அடுத்து நமது நாட்டுப் பொருளாதாரத்தில் நெல் கணிசமான பங்கு வகிக்கிறது. நெல் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருப்பது மகிழத்தக்கது.

ஆயினும், நமது நாட்டில் நெல் உற்பத்தி ஹெக்டேர் ஒன்றுக்கு 3½ டன்னுக்குப் பதில் 1½ டன்னாகத்தான் இருக்கிறது. நெல் உற்பத்தியை மேலும் கூட்டினால் வேளாண்மைப் பொருளாதாரம் சிறக்கும்.

இந்தியப் பொளாதாரத்தில் வேளாண்மைப் பொருளாதாரம் முதல் இடத்தை வகிக்க வேண்டும். தரிசு