பக்கம்:எண்ணக்குவியல்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான் கண்ட வ.உ.சி.

49

சந்தித்து "உங்களைப் போன்றவர்கள் ஜஸ்டிஸ் கட்சியை விட்டு, காங்கிரஸ் கட்சிக்கு வந்து சேரவேண்டும்" எனக் கூறினார்கள். இளமை முறுக்கினாலும், இரத்தத் திமிரினாலும் அவர்களை கடுமையாகத் தாக்கிக் கடுஞ் சொற்களைக் கூறி விட்டேன். அது நிகழ்ந்து இன்றைக்கு முப்பத்தாறு ஆண்டுகள் ஆயின என்றாலும், இன்றைக்கும் அது என் உள்ளத்தைச் சுடுகின்றது. அச்சொல், "உங்கள் அறிவும், திறமையும், உழைப்பும் தமிழர் நலனுக்குப் பயன்படாமல், அறியாமை காரணமாகப் பிறர் நலனுக்குப் பயன்படுகின்றன. அத்தவறை நானும் செய்யவேண்டுமா?" என்பதுதான். இதற்காக அவர்கள் எனக்களித்த தண்டனை, அவர்கள் வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்று, பல மணி நேரம் நிலைமையை விளக்கி, எனது கருத்தை மாற்றி, அவர் தவறு செய்யவில்லை என மெய்ப்பித்ததுதான். பொதுவாக, அவர்கள் உள்ளத்தைத் திறந்து காட்டி, தம் முள்ளத்தே மறைத்து வைத்திருந்த பல செய்திகளையும் கூறிக் கண்கலங்கினார்கள்; வருந்தினேன், எனது வலக் கையால் அவரது கண்ணிரைத் துடைத்ததுதான் இன்றைக்கு ஆறுதலாய் இருந்து வருகின்றது. அவர் கூறிய செய்திகளை வெளியிடும் காலம் இன்னும் வரவில்லை. அவர் மனைவியார் என் வயிற்றிற்கு ஒருவேளை உணவளித்தார்கள். அவரோ, என் அறிவுக்குப் பலநாள் உணவளித்து மறைத்தார், அவர் அளித்த உணவு, எவரையும் வையாதே; வைவது தமிழனின் பண்பன்று, பிறரை வைவதுதான் முன்னேறும் வழி என்று எண்ணாதே; எவன் முன்னேறினாலும் வைபவன் முன்னேற முடியாது என்பதை நம்பு. தவறு என்று கண்டால் தீமையற்ற சொற்களால் அச்சமற்றுக் கூறு” என்பதுதான்.எ.கு-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எண்ணக்குவியல்.pdf/50&oldid=1252945" இலிருந்து மீள்விக்கப்பட்டது