பக்கம்:என் சுயசரிதை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

பள்ளிக்கு அனுப்பப்பட்டோம். அதிலிருந்து 1885-ஆம் வருஷம் இரண்டு பெயரும் அக்காலத்து மிடில்ஸ்கூல் பரிட்சையில் தேறி 1886-ஆம் வருஷம் பச்சையப்பன் காலேஜைப் போய் சேர்ந்தோம். பிறகு 1887-ஆம் ஆண்டு இரண்டு பெயரும் அக்காலத்து மெட்ரிக்குலேஷன் பரிட்சையில் தேறினோம். இதன் பேரில் நான் கவர்ன்மெண்ட் காலேஜாகிய பிரசிடென்சி காலேஜைப் போய் சேர்ந்தேன். எனது நண்பர் பச்சையப்பன் காலேஜிலேயே படித்து வந்தார். இப்படி நான்கு வருடங்கள் நாங்கள் பிரிக்கப்பட்ட போதிலும் எங்கள் சிநேகிதம் மாறவில்லை. இரண்டு பெயரும் ஒரே வருஷம் பி.ஏ. பரிட்சையில் தேறி மறுபடியும் லா (Law) காலேஜில் ஒன்றாய் படிக்க ஆரம்பித்தோம், பி எல். பரிட்சையில் இருவரும் ஒரே வருஷம் தேறினோம். அதன் பேரில் எனது நண்பர் “ஜேம்ஸ் ஷார்ட்” என்பவரிடம் அப்ரென்டிசாக (Apprentice) அமர்ந்தார், நான் ஸ்ரீமான் சுந்தரம் சாஸ்தியாரிடம் முதலிலும் அவர் அகாலமடைந்த போது அவர் குமாரராகிய குமாரசாமி சாஸ்திரியிடமும் வித்யார்த்தி (Apprentice) ஆனேன். இப்படி இருந்தும் கோர்ட்டில் ஒன்றாய் வேலை கற்றுவந்தோம். மத்தியான சிற்றுண்டியும் ஒன்றாய் புசிப்போம்! இரண்டு பெயரும் 1898-ஆம் வருஷம் வக்கீல்களாக என்ரோல் செய்யப்பட்டோம். 1891-ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட சுகுண விலாச சபைக்கு இரண்டு பெயரும் சாயங்காலங்களில் போய் காலங்கழிப்போம். பிறகு 1924 இல் நான் ஸ்மால்காஸ் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டேன். அதே வருஷம் எனது நண்பர் ஹைகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1928-ஆம் வருஷம் நான் 55 வது வயதில் விலக வேண்டி வந்தது. அதே வருஷம் அவரும் ஹைகோர்ட் பதவியிலிருந்து விலகினார்! மேற்கூறியபடி நாங்களிருவரும் ஏறக்குறைய சமமாக உயிர் வாழ்ந்ததை பரம் பொருள் எங்களுக்கு : அளித்த பேரருளாகக் கொள்கிறேன். பிறகு 1954-ஆம் வருஷம் எனது துரதிஷ்டத்தால் என்னை விட்டு வைகுண்டம் அடைந்தார்.

இனி 1882-ஆம் வருடத்தின் என் பழைய கதைத் தொடர்ச்சியை எடுத்துக் கொள்கிறேன். கோவிந்தப்ப நாயக்கர் பள்ளியில் படித்தபோது நடந்த செய்திகளில் தற்காலம் எனக்கு முக்கியமாக ஞாபகமிருப்பது அங்குள்ள உபாத்தியாயர்களுக்கெல்லாம் பிள்ளைகள் நிக் நேம் (Nick Naine) நிந்தைப் பெயர் வைத்ததேயாம். தமிழ் வாத்தியாருக்கு மாங்காய் வாத்தியார் என்று பெயர். மற்றொருவருக்கு பழஞ்சால்வை என்று பெயர். ஹெட்மாஸ்டருக்கு (Head master) நெட்டைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/19&oldid=1112820" இலிருந்து மீள்விக்கப்பட்டது