பக்கம்:என் சுயசரிதை.pdf/4

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

என் தாய் தந்தையர்

என் தகப்பனாரைப்பற்றி சில வார்த்தைகள் எழுத விரும்புகிறேன். மேற்குறித்த புத்தகத்தில் அவர் கையெழுத்திலிருக்கும் சில குறிப்புகளை இங்கு எடுத்து எழுதுகிறேன். அவர் பிறந்தது. 1830-ஆம் வருஷம் மார்ச் மாதம் 1-ந்தேதி ரோகிணி நட்சத்திரம் ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்த ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தபடியால் அவரது அம்மானுக்கு ஏதாவது கெடுதி நேரிடுமென்று பயந்திருந்தார்களாம், ஆயினும் அப்படி ஒன்றும் கெடுதி நேரிட வில்லையென்று என் தகப்பனார் கூறியது எனக்கு ஞாபகமிருக்கிறது. (சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் கவனிப்பார்களாக)

1850ஆம் வருஷம் அவருக்கு முதல் விவாகமானது. அதன் மூலமாக ஒரு புத்திரனும் இரண்டு புத்திரிகளும் பெற்றார். பிறகு அந்த தாரம் தப்பிப்போகவே 1860ஆம் வருஷம் இரண்டாவது மனைவியாக மாணிக்கவேலு அம்மாள் என்னும் என் தாயாரை மணந்தார். இந்த விவாகத்தின் மூலமாக அவருக்கு நான்கு புத்திரர்களும் நான்கு புத்திரிகளும் பிறந்தார்கள். அந்த நான்கு புத்திரர்களில் கடைசி புத்திரன் நான். என் தகப்பனார் என் தாயாரை மணந்த சமயம் நேரிட்ட ஒரு சந்தர்ப்பம் சோதிடத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு சிறிது பலன் தரக்கூடிய விஷயமாயிருப்பதால் அதை இங்கு எடுத்தெழுதுகிறேன், இரண்டாம் தாரத்தைத் தேடியபொழுது எனது தகப்பனாருக்கு வயது முப்பதானபடியால் இரண்டாம் தாரம் சிறு பெண்ணாயில்லாமல் கொஞ்சம் வயதான பெண்ணா யிருக்கவேண்டுமென்று கோரினார். என் தாயாருக்கு அப்போது வயது இருபதாயிருந்தது. அன்றியும் கொஞ்சம் சிவப்பாயிருப்பார்கள். ஆகவே என் தாயாரையே மணக்க வேண்டுமென்று நிச்சயித்தனர். ஆனால் அக்கால வழக்கின்படி இருவருடைய ஜாதகத்தையும் எடுத்துக்கொண்டு பிரபல ஜோஸ்யர்களுக்குக் காட்டிய பொழுது அவர்கள் எல்லோரும் பெண் ஜாதகத்தின்படி வயிற்றுப் பொருத்தமுமில்லை, கழுத்துப் பொருத்தமுமில்லை என்று கூறினார்களாம். அதாவது குழந்தைகள் பிறக்கமாட்டார்கள், அமங்கலியாய் போய்விடுவாள் என்று அர்த்தம். அது எப்படியாயினும் ஆகுக. இந்தப் பெண்ணைத் தான் நான் மணம் புரிவேன் என்று என் தகப்பனார் ஒரே பிடிவாதமாய் என் தாயாரை மணம் புரிந்தார். ஜோஸ்யர்கள் கூறியதற்கு நேர்விரோதமாக என் தாயாருக்கு நான்கு பிள்ளைகளும் நான்கு பெண்களும் பிறந்தார்கள், வயிற்றுப் பொருத்தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/4&oldid=1108868" இலிருந்து மீள்விக்கப்பட்டது