பக்கம்:என் சுயசரிதை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

எனக்கிருக்கிறது. ஈசன் திருவுள்ளம் எப்படியோ! இவையன்றி சபாபதி துணுக்குகள் என்னும் சிறு காட்சிகளை சேர்த்து அச்சிட்டுள்ளேன்.

சென்ற பத்து பதினைந்து வருடங்களாக நான் எழுதிய நாடகங்களெல்லாம் பேசும் பட ரீதியாக இருக்கின்றன என்பதற்கு தடையில்லை. அதற்கு முக்கிய காரணம் ஏறக்குறைய அவைகள் எல்லாம் திரை நாடகங்களாக உபயோகப்பட வேண்டுமென்று எழுதினதேயாம். ஆங்கிலத்தில் எழுதிய நாடகங்கள் (1) முன்பே கூறியபடி ஹரிச்சந்திரா நாடகம் முதலில் ஆங்கிலத்தில் எழுதினதாம். (2) அந்த சிறுவர்கள் சபைக்கு நான் தமிழில் எழுதிய, யயாதியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொடுத்தேன். (3) சபாபதி 4ம் பாகம் இது முதல் உலக யுத்தத்திற்காக பொருள் சேர்க்க கமிட்டியார் இச்சைப்படி சேப்பாக்கம் மைதானத்தில் ஆடுவதற்காக பெரும்பாலும் ஆங்கிலத்தில் எழுதியதாம். (4) முன்பே நான் கூறித்தபடி இந்தியனும் ஹிட்லரும் என்னும் நாடகத்தை ஆங்கிலத்தில் முதலில் எழுதினேன். பிறகு தமிழில் மொழி பெயர்த்தேன். (5) சபாபதி துவிபாஷி இது பெரும்பாலும் ஆங்கிலத்திலும் சிறிது தமிழிலும் எழுதப்பட்டது.

நாடக சம்பந்தமான நூல்கள்

கீத மஞ்சரி :--- நான் எழுதிய நாடகங்களுக்கு நானும் எனது நண்பர்களும் ஆதியில் எழுதிய சில பாட்டுக்கள் அடங்கியது. இம் முதற் பதிப்பு முற்றிலும் செலவாய் விட்ட போதிலும் இதை இரண்டாவது முறை அச்சிடுவதில்லை என்று தீர்மானித்தேன். இதற்கு முக்கிய காரணம் எனது நாடகங்கள் ஆடும் நடிகர்கள் தாங்கள் ஆடும் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு மெட்டுகளையுடைய பாட்டுகளை பாட விரும்புவதேயாம்.

நாடகத்தமிழ் :--- இது நான் மிகவும் சிரமப்பட்டு ஆராய்ச்சி செய்து வெளியிட்ட நூலாம். இதற்காக சென்னை சர்வகலாசாலையார் எனக்கு ரூபாய் 2250 கொடுத்தார்கள். இதை 1933-ஆம் வருஷம் அச்சிட்டேன்.

நாடக மேடை நினைவுகள்:-- ஆறு பாகம் எழுதியது 1927-36 இவைகளை 1932, 1933, 1935, 1936, 1937 வருடங்களில் அச்சிட்டேன்.

நாடக மேடையில் தேர்ச்சி பெறுவதெப்படி:--- நடிகர்களுக்கு உபயோகப்படும்படி. இதை 1936-ஆம் வருஷம் அச்சிட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/52&oldid=1112710" இலிருந்து மீள்விக்கப்பட்டது