பக்கம்:என் சுயசரிதை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

எழுதிய நாடகங்கள் இரண்டாம். ஒன்று ‘இராமலிங்க சுவாமிகள்’ இதை எழுதி பேசும் படமாக்கக் கொடுத்ததில் நான் ஒரு பெருந்தவறிழைத்தேன். அத்தவறை மற்றவர் இழைக்காதபடி அதை இங்கு தெரிவிக்கிறேன். அதை என்னிடம் ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் அவசரமாக வேண்டுமென்று கேட்க விரைவில் எழுதி முடித்தேன். உடனே அவர்கள் வந்து என்னை கேட்க, நான் அதற்கு ஒரு நகல் வைத்துக்கொள்ளாமலே அவர்களிடம் கொடுத்து விட்டேன். பிறகு அது பேசும் படமாக ஆடப்பட்டபின் நான் எழுதியதைக் கேட்க, அதை அவர்கள் எங்கோ தொலைத்துவிட்டதாகக் கூறினர்! நான் என்ன செய்வது? நான் இதை மிகவும் சிரமப்பட்டு எழுதிய நாடகம். மறுபடியும் நான் அதை எழுதுவது எனக்கு இவ்வயதில் சாத்தியமில்லாமற்போயிற்று. ஒரு எழுத்தாளன் தான் எழுதிய கதை ஏதாவது ஒன்றை நகல் வைத்துக்கொள்ளாமல் மற்றவர்களிடம் கொடுத்துவிடுவது தவறென்பதை இதைப் படிக்கும் மற்றவர்களுக்கு வணக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதன்பின் ‘விஸ்வாமித்திரர்’ எனும் நாடகத்தை எழுதி எனது நண்பர் ஜகந்நாதம் என்பவருக்கு கொடுத்திருக்கிறேன். அதற்காக நான் பெற்ற ஊதியம் ரூபாய் 3000-ஆம். இது பேசும் படமாக ஆடப்பட்டது.

சென்னையில் ரேடியோ வந்தபிறகு அதில் பன்முறை ஆங்கிலத்திலும் தமிழிலும் பேசியிருக்கிறேன். ரேடியோவுக் கென்றே இரண்டொரு நாடகங்களை எழுதியிருக்கிறேன். அவைகள் ரேடியோவில் ஆடப்பட்டிருக்கின்றன. அவைகளில் ஒன்றாகிய பெண்புத்திக் கூர்மை என்பதை அச்சிட்டிருக் கிறேன்.

இதை வாசிக்கும் தாங்களும் எழுத்தாளர்களாக வேண்டு மென்று விரும்பும் எனது இளைய நண்பர்களுக்கு ஒரு விண்ணப்பம். நீங்கள் ஏதாவது எழுதினால் அதை உபயோகிக்க யாராவது விரும்பினால், அதற்காக, எவ்வளவு சிறியதாயிருந்த போதிலும் ஏதாவது ராயல்டி, ஆனரேரியம் பெறாது கொடுக்காதீர்கள். இதில் தவறில்லை. இது தான் சரியான மார்க்கம். மேநாட்டு எழுத்தாளர்கள் இக்கோட்பாட்டை தவறாது கைப்பற்றி நடக்கின்றனர் என்பது ஞாபகமிருக்கட்டும். நான் எனது நாடகங்களை ஒன்றையும் ராயல்டி கொடுக்காமல் ஆடுவதற்கு உத்தரவு கொடுப்பதில்லை என்பது எல்லோரும் அறிந்த விஷயமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/56&oldid=1112849" இலிருந்து மீள்விக்கப்பட்டது