பக்கம்:என் சுயசரிதை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

கலாசாலைக்கு மாணவர்களாக அழைத்துக்கொண்டு போகிற வழக்கப்படி, என் தந்தையாரையும் அவர் தம்பியையும் தன் உயர் தரப்பள்ளிக்கு அழைத்துச் சென்றனராம். அப்பாட சாலை அக்காலம் நுங்கம்பாக்கத்தில் தற்காலத்தில் ‘பழைய காலேஜ்’ (Old College) என்று சொல்லப்பட்ட இடத்தில் இருந்ததாம். பிறகு மாகாண காலேஜாக (Presidency College) மாற்றப்பட்டு திருவல்லிக்கேணியில் தற்காலமிருக்கும் பெரிய கட்டடத்தில் மாற்றப்பட்டது.

ஏழை குடும்பம்

என் தகப்பனார் அந்த காலேஜில் அரைச் சம்பளத்தில் படித்ததாக சொல்லியிருக்கிறார். என் பாட்டனாராகிய ஏகாம்பர முதலியார் என்பவர் செல்வந்தரல்ல, ஒரு சாராயகடையில் குமாஸ்தாவாக சொல்ப சம்பளம் பெற்று, குடும்பத்தை சம்ரட்சணம் செய்துவந்தனராம். ஆயினும் தன் பிள்ளைகள் இருவரும் நன்றாய் படிக்கவேண்டுமென்று தீர்மானித்து கஷ்டப்பட்டு அரைச்சம்பளத்தில் அந்த காலேஜில் படிக்கச் செய்தராம். இந்த ஸ்திதியில்தான் என் தகப்பனார் கஷ்டப்பட்டுப் படித்ததற்கு உதாரணமாக அவர் எனக்கு கூறிய கதை ஒன்றை இங்கு எழுதுகிறேன். அச்சமயம் மத்தியான சாப்பாட்டிற்காக ஒரு பாத்திரத்தில் கூழ் எடுத்துக்கொண்டுபோய், அதற்கு வியஞ்சனமாக வெங்காயப் புரையை வைத்துக்கொண்டு சாப்பிட்டு வந்தனராம்.

சென்னை சர்வகலாசாலையின் நூறாம் ஆண்டு கொண்டாட்டத்தின் போது அச்சிட்ட ஒரு புஸ்தகத்தில் என் தகப்பனாரைப் பற்றி எழுதியிருப்பதை இங்கு மொழி பெயர்க்கிறேன். P. விஜயரங்க முதலியார் 1851 ஆம் வருஷம் பிரோபிஷன்ட், (Proficient) பரிட்சையில் இரண்டாவது வகுப்பில் தேறினார். அவ்வருஷம் ராபர்ட்சன் என்பருடைய ‘அமெரிக்கா சரித்திரம்’ என்னும் நூலை தமிழில் எழுதியதற்காக ஒரு பரிசைப் பெற்றார். மேற்கண்ட புரோபிஷன்ட் டிகிரி தற்காலத்தில் பி.ஏ. பட்டத்திற்கு சமானமாகும். அந்த பரிட்சையில் தேறுபவர்களுக்கு கலாசாலையார் தங்கள் செலவில் ஒரு பொன் மோதிரம் அக் காலம் அளித்துவந்தனர். அப்படி என் தகப்பனாருக்கு கொடுக்கப்பட்ட பொன் மோதிரம் சற்றேறக்குறைய தன் அறுபதாம் ஆண்டு வரையில் அவர் விரலில் அணிந்திருந்தார். அவர் தமிழில் எழுதிய அமெரிக்க சரித்திரம் பிறகு அச்சிடப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/6&oldid=1112808" இலிருந்து மீள்விக்கப்பட்டது