பக்கம்:என் சுயசரிதை.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

வந்தனர். கடைசியாக கண் ஆஸ்பத்திரியில் மிகப் பிரபல வைத்தியரிடம் காட்டி கேட்டபோது அவர் கூறிய பதிலை அப்படியே எழுதுகிறேன். “மிஸ்டர் சம்பந்தம், உன் கண் பார்வை முற்றிலும் போய் நீ அந்தனாக போகமாட்டாய். கவலைப் படவேண்டாம்” என்று சொன்னாரேயொழிய ஆபரேஷன் செய்யக்கூடும் என்று சொல்லவேயில்லை. உனக்கோ வயதாகி விட்டது இனி ஆபரேஷன் செய்வதில் பிரயோசனமில்லை என்று சொல்வதற்கு பதிலாக மேற்கண்டபடி சொன்னார் என்று தான் அர்த்தம் செய்துகொண்டேன். இதைக் கேட்டவுடன் நான் தமிழுக்கும் தமிழ் நாடகங்களுக்கும் எப்படி பணி செய்வது என்று மிகவும் வருத்தப்பட்டேன் என்றே கூறவேண்டும்.

இச்சமயம் ஏதோ என் மனதில் விரக்தி தோன்றினவனாய் சந்யாசம் மேற்கொள்ளத் தீர்மானித்தேன். அதற்காக என் உயிர் நண்பரும் குருவுமான. வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்காருடன் கலந்து பேச அவர் “அப்படியே செய்யலாம், உண்மையில் சந்யாசம் என்பது பெண்ணாசை, பொன் ஆசை, மண் ஆசை மூன்றையும் விட்டு வாழ்வதாகும் மேல் வேஷங்களில் ஒன்றுமில்லை” என்று சொல்லி முதற்படியாக ‘குடசர சந்யாசம்’ என்பதை எடுத்துக்கொள்ளும்படி சொன்னார். அதற்குரிய நிபந்தனைகளையும் எனக்குப் போதித்தார். அவர் கட்டளைப்படி என் சொத்துக்களை எல்லாம் என் குமாரனான வரதராஜனிடம் ஒப்புவித்துவிட்டு வீட்டின் மேல்மாடி அறையில் வசிக்க ஆரம்பித்தேன். இது நடந்தது 1950-ஆம் வருஷம் பிப்ரவரி முதல் தேதியாகும். மேற்சொன்ன மூன்று பற்றுகளையும் நான் வழித்தபோதிலும் தமிழ் பாஷையிலுள்ள அதிலும் தமிழ் நாடகத்திலுள்ள பற்றை மாத்திரம் விட என்னால் முடியவில்லை. இதைப்பற்றி யோசித்து இது உலக பற்றை சார்ந்ததல்ல. தமிழ் பாஷைக்கு தமிழனாய் பிறந்த நான் செய்யவேண்டிய கடமையாகும் என்று என் மனதைத் தேற்றிக்கொண்டேன். திருநாவுக்கரசு சுவாமிகள் “என் கடன் பணி செய்து கிடப்ப தாகும்” என்று கூறியிருப்பது ஞாபகத்திற்கு வந்தது. ஆகவே தமிழில் நான் எழுதுவதை நிறுத்தலாகாது என்று தீர்மானித்தேன். ஆயினும் கண் பார்வையில்லாத நான் இதை எப்படி செய்வது? என்று முன் சொன்னபடி பெருங் கலக்கமுற்றேன். தினம் நான் இரவில் தூங்கப் போகுமுன் தான் வணங்கும் தெய்வங்களைத் துதித்துவிட்டு தூங்குவது என்வழக்கம். அப்படி செய்யும் போது “இதற்கு நீங்கள் தான் ஒருவழிகாட்ட வேண்டும்” என்று கேட்டுவந்தேன். சிலதாள் கழித்து ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/68&oldid=1112859" இலிருந்து மீள்விக்கப்பட்டது