பக்கம்:என் சுயசரிதை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நகைகளை விட்டு மற்றவைகளை யெல்லாம் வாங்கிக்கொண்டோம். அன்றியும் நாங்கள் இருவரும் போட்டுக் கொண்டிருந்த ரவை கடுக்கன், பொன் அரைஞாண், பொன் கடிகாரங்கள், மோதிரங்களை கழட்டி இந்நகைகளை யெல்லாம் எங்கள் நம்பிக்கையுள்ள ஒரு சிநேகிதர் மூலமாக விற்றுவிட்டு கடனை முன்பு தீர்த்தோம். அச்சமயம் நம்மவர்களில் சிலர் என்ன இது தகப்பனார் இறந்த மூன்று மாதத்திற்குள்ளாக இப்படி குடும்ப நகைகளையெல்லாம் விற்றுவிடுகிறார்களே என்று இகழ்வார்களே என்று பயந்ததுண்டு. ஆயினும் என் பந்துக்களில் பலர் இப்படி செய்ததற்காக புகழ்ந்ததுண்டு. நாங்கள் மேற்சொன்னபடி உடனே கடனைத் தீர்த்திராவிட்டால் சில வருடங்களில் பெருந்தொகையாகி எங்கள் குடும்பத்தையே அழிந்திருக்கலாம். இதன்பின் நாங்கள் சம்பாதிக்க ஆரம்பித்த போது எங்கள் மனைவிமார்களுக்கு அவர்கள் கொடுத்த நகைகளுக்கு இரண்டுபங்கு அதிகமாக கடவுள் கிருபையால் செய்து போட்டோம் என்று சந்தோஷத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் பி. ஏ. வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது கம்ப ராமாயணத்தில் “கடன்கொண்டார் நெஞ்சம் போலும் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்னும் வரியை படித்த போது என் ஜன்மத்தில் ஒரு காசும் கடன் வாங்கக்கூடாது என்று தீர்மானித்துக்கொண்டேன். அதன்படி இன்றுவரையில் ஒருவரிடமிருந்தும் எந்த அவசரத்திலும் நான் கடன் வாங்கியவன் அன்று. இதை வாசிக்கும் எனது நண்பர்கள் அப்படியே நடப்பார்களாக.

குறித்த காலப்படி நடத்தல்

இவ்விஷயத்தில் என் அருமைத் தந்தையாரே எனக்கு முதல் போதகர். அவர் பள்ளிக்கூடங்களை விஜாரிப்பதற்காக போவதில் ஒருபோதும் காலம் தவறிப்போனதில்லை. என்று பலர் கூறக் கேட்டிருக்கிறேன். ஒரு உதாரணம் கொடுக்கின்றேன். ஒரு நாள் ஒரு உயர் தரப் பள்ளியை பரிட்சிப்பதற்காக காலை 11-மணிக்கு தானும் தனக்குமேற்பட்ட உத்தியோகரான மிஸ்டர் பவுலர் (Mr. Powler) உம் வருவதாக குறித் திருந்தார்களாம். அன்று மிக அதிக மழை பெய்ததாம். இருந்த போதிலும் 11-மணிக்கு முன்னதாகவே அவர் போய் சேர்ந்த போது பள்ளிக்கூடத்தில் கொஞ்சம் பிள்ளைகளும் கொஞ்சம் உபாத்தியாயர்களும் தான் வந்திருந்தார்களாம். பவுலர் துரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்_சுயசரிதை.pdf/75&oldid=1123280" இலிருந்து மீள்விக்கப்பட்டது