பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

என் பார்வையில் கலைஞர்



அடிமையின் விலை
ஒரு
எம்.எல்.ஏ. பதவி

செல்வி. ஜெயலலிதா, முதலமைச்சர் ஜெயலலிதாவானார்.

தமிழகப் புதிய சட்டப் பேரவையில் உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்கள். பேரவையின் செய்தியாளர் மாடத்தின் முதல் வரிசையில், இதர செய்தியாளர்களோடு நானும் அமர்ந்திருந்தேன்.

அந்தப் பதவி ஏற்பு நிகழ்ச்சியே கேவலமாக இருந்தது. காங்கிரஸ் உறுப்பினர்களும், தி.மு.க.வின் ஒற்றை உறுப்பினர் பரிதி இளம் வழுதியும் நிமிர்ந்த தலையோடு, நேர் கொண்ட பார்வையோடு பதவியேற்ற போது, அ.தி.மு.க உறுப்பினர்கள் ஜெயலலிதா காலில் நெடுஞ்சாண்கிடையாகக் குப்புற விழுந்தார்கள். கும்பகோணம் சட்டப் பேரவை உறுப்பினர், அவர் காலில் கீழே விழும் போது அவரது வேத காம உச்சிமுடி, அம்மையாரின் பாதங்களில் தொடப்பைக் குஞ்சம் போல், கறுப்பு நிறத்தில் தெரிந்தது. ஆஜானுபாகு தோற்றம் கொண்ட அத்தனை பேரும், தமிழனின் சுய மரியாதை காக்கும் திராவிட இயக்கத்திலிருந்து வந்ததாகத் தம்பட்டம் அடிப்பவர்கள். சட்ட சபைக்குள்ளேயே குனிந்து விழுந்தால் நேரமாகும் என்று சொல்லி, அந்த அம்மாவின் காலில் தொப்பென்று விழுந்ததை, வெளிநாட்டுத் தொலைக் காட்சிகளும் படம் பிடித்துத் தமிழனின் தன்மானத்தை உலகெங்கும் காட்டின.

பொதுவாக ஒருவர் காலில் இன்னொருவர் விழும் போது, விழுந்தவரை ‘வேண்டாம் வேண்டாம்’ என்று சொல்லித் தொழுகைக்குரியவர் தூக்கி விடுவது அல்லது தடுப்பதே இயல்பு. பெரியவர்கள் காலில் விழுகிறவர்களும், இலேசாகக் குனிந்து, அவர்களின் முட்டிக் கால்களைப் பட்டும் படாமலும் தொடுவார்கள்.