பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

107



சித்தரிக்கப்பட்டார். ஒரு அதிமுக உறுப்பினர் ஒரு கேள்வியைப் பேரவையில் கேட்பார். உடனே சம்பந்தப்பட்ட அமைச்சர் ‘கல்லும் நடந்தால் கனியாகும்... எங்கள் இதயக் கனி, முக்கால முதல்வி, தமிழ்த் தாய், பாரத மாதா, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் மேலான ஆணையின்படி, சட்டப் பேரவையில் கொசுத் தொல்லையைப் போக்குவதற்கு ஐந்நூறு ரூபாய்க்கு மருந்து வாங்கப் பட்டுள்ளது' என்பது மாதிரி பதிலளிப்பார். இப்படி முதலமைச்சர் பட்டாதி பட்டங்களோடு வலம் வந்த போது, அவர் விடுதலைப் புலிகளுக்கு எப்படி பயப்படுகிறார் என்பதை அறிந்திருந்த நான் சிரித்துக் கொள்வேன். அதே சமயம் தனி மனிதனான நான், விடுதலைப் புலிகளுக்கு எதிரான செய்திகளை சென்னை வானொலியில் துணிந்து வெளியிட்டு வந்தேன்.

சட்டப் பேரவையில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எந்த அளவிற்கு அம்மாவிடம் அடிமையாக இருந்தார்களோ, அந்த அளவிற்கு பரிதி இளம்வழுதியையும், ஒரு சில காங்கிரஸ் உறுப்பினர்களையும் எஜமானத்தனமாக அதட்டுவார்கள். பரிதி இளம் வழுதியும் விடமாட்டார். பல சமயங்களில், அவர் குண்டுக்கட்டாக சபையில் இருந்து, காவலர்களால் வெளியேற்றப் பட்டிருக்கிறார். ஒரு தடவை இப்படி இவரைத் தூக்கிக் கொண்டு போகும் போது, சட்டப் பேரவைக் காவலாளியான ஒரு அதிமுக அடிமை, பரிதியை ஊமையடியாக அடித்து விட்டார். இவரும் கலங்கிய கண்களோடு, காங்கிரஸ் கட்சியின் சட்டப் பேரவை அலுவலகத்துக்கு வந்தார். என்னால் தாங்க முடியவில்லை. அவரது தோளில் கை போட்டபடியே ‘கவலைப்படாதடா! உனக்கும் ஒரு காலம் வரும். அது வரைக்கும் பொறுத்திரு’ என்று சொன்னபோது, அவர் என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதார்.

பரிதி இளம்வழுதியைத் தேற்றி விட்டு, சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலிருந்து நான் பேரவைக்குள் போன போது, இடையில் கலைஞரின் உதவியாளரான சண்முகநாதன் எதிர்ப்பட்டார். இந்த மாதிரியான சந்திப்புகளில் பொதுப்படையாகப் பேசிக் கொள்வோம். அப்போது அவர் சட்டப் பேரவையின் துணைப் பொதுச் செயலாளராக இருந்தார். முன்னதாக கலைஞரின் உதவியாளர் என்பதற்காகவே, எம்.ஜி.ஆர் அரசால் கொடுமை செய்யப்பட்டவர்.