பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

IX


ஒரு ஆங்கிலப் பத்திரிககையில் எப்படி செய்தி வந்தது தெரியுமா? சொல்லவே எனக்கு வேதனையாக இருக்கிறது. இறந்தவர்கள் என்று ஒரு பட்டியல் போட்டு ஒரு சிங்கிள் கால செய்தியாக பாரதிதாசனின் மறைவுச் செய்தி வெளியிடப்பட்டது. அது அவருடைய உள்ளத்தைத் தாக்கியிருக்கிறதென்று கருதுகிறேன்.

அதனால்தான் சொல்கிறார் ‘ஒருவேளை நான் மரணமடைந்து விட்டால் ஒரு சினிமா நடிகையின் திருமணச் செய்திக்குக் கீழே அங்கே கூட பாருங்கள் சினிமா நடிகையின் திருமணச் செய்திக்குக் கீழே... ஒரு சின்னச் செய்தியாக மரணச் செய்தி வரலாம். அதுவும் எனக்கு சலுகை காட்டுவது போல’ என்று குறிப்பிடுகிறார். இப்படி உள்ளத்தை தொடக்கூடிய கதைகளை எழுதியவர்.

பரிணாம மரங்கொத்திகள்

“ஒரு மாமரமும் மரங்கொத்தி பறவைகளும்” என்ற இந்தத் தொகுப்பில் அருமை நண்பர் பொன்னீலன் எடுத்துக்காட்டியதைப் போல, பல அருமையான செய்திகளை சில பாத்திரங்கள் மூலமாக எடுத்துக் காட்டியிருக்கிறார். அதிலே குறிப்பாகச் சொல்ல வேண்டுமேயானால் பரிணாம வளர்ச்சி, பரிணாமம் எதிர் பரிணாமமாக ஆகிறது. அந்த பரிணாம வளர்ச்சி என்ற வார்த்தையே ஏன் அவருடைய உள்ளத்தில் பிறந்தது என்பது எனக்குத் தெரியும். ‘நான் தந்தை பெரியாரின் திராவிட இயக்கத்தில் பரிணாம வளர்ச்சி” என்று எங்கேயோ ஒருவர் பேசியது - எங்கேயோ அல்ல சட்டமன்ற பேரவையில் பேசியது, நம்முடைய சமுத்திரத்தின் உள்ளத்தைத் தொட்டிருக்கிறது. அதை வைத்து பரிணாம வளர்ச்சி எப்படி ஆகியிருக்கிறதென்பதைத்தான் இந்த எழுத்தாற்றலின் மூலமாக அவர் காட்டியிருக்கிறார்.

பரிணாம வளர்ச்சியும், எதிர்ப் பரிணாம வளர்ச்சியும் ஏற்படுவது இயற்கை. எடுத்துக்காட்டாக மில்லியன் வருடங்களுக்கு முன்பிருந்த மிகப் பெரிய மிருகமான ‘டைனோசர்’ இப்பொழுது ஓணானாக சிறுத்துப் போனது. நாட்டில் மிகப் பெரிய தாவரமான ஒரு மரவகை இப்பொழுது பிரளிச் செடியாக ஆகிவிட்டது. இப்படி நடமாடும் பல்கலைக் கழகமான தமிழன், தவழும் நிலைக்கு தள்ளப்பட்டதும் ஒருவிதப் பரிணாமமே’ (பலத்த கைதட்டல்) புரிந்து கொண்டிருக்கிறீர்கள். விளக்கம் தேவையில்லை.