பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/110

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

109



இப்படிச் சொல்வதால், நான் ஜெயலலிதாவிற்குத் தனிப்பட்ட முறையில் எதிரானவன் என்று பொருளல்ல. சர்ச் பார்க் கான்வென்டில், அவர் முதலாவதாக வந்ததும், சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதோடு, உலகளாவிய அளவில் அவர் அறிவு விரிவானது என்பதும் எனக்குத் தெரியும். இளமையிலேயே பல்வேறு ஆணாதிக்கக் கொடூரங்களுக்கு உட்பட்ட காரணத்தால்தான், அவர் மனிதர்களை நம்பாத போக்கிற்கு, அதாவது அதன் மாறு வேடமான ஆணவத்திற்குப் போய் விட்டார் என்பதும் தெரியும். கூடவே ஆரம்பக் காலத்தில் என் மீது மிகவும் அன்பு கொண்டிருந்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் நோக்கும், சட்டப் பேரவையின் போக்கும், கலைஞர் இழிவு செய்யப்படுவதும், என்னைக் கலைஞரிடம் மனிதன் என்ற முறையில் ஈர்த்தது. பிறகு தமிழன் என்ற முறையில் ஒன்றிக்கச் செய்தது. இதன் விளைவாக, சென்னை வானொலி நிலையம், தமிழக அரசு எதிர்ப்புச் செய்தி நிலையமாகிவிட்டது. காங்கிரஸ் உறுப்பினர்களும், ஜெயலலிதாவை எதிர்க்கத் துவங்கியதால், என் பணி எளிதாயிற்று.

இதற்கு முன்பு, எம் ஜி ஆர் அமைச்சரவையில் இடம் பெற்ற எங்கள் பக்கத்துக்காரரான கே.கே.எஸ்.எஸ் ஆர். ராமச்சந்திரனும், அவரது துணைவியாரும் தமது காலில் விழுந்ததைப் புகைப்படமாக எடுத்துப் பத்திரிகைகளுக்கு அனுப்பியவர் ஜெயலலிதா. இப்படிப்பட்ட ஒரு சேடிஸம், அதாவது பிறா் துன்பத்தில் அல்லது பிறரைத் துன்புறுத்தி மகிழும் போக்கு, தமிழக அரசியலில் கண்டறியாதது. ஒருவேளை, புரட்சித் தலைவி என்ற பட்டத்திற்கு ஏற்ப நடக்க வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்தாரோ என்னமோ - ஒரு பாவமும் அறியாத, அந்த முன்னாள் அமைச்சரின் மனைவியையும் காலில் விழ வைத்துக் கேவலப்படுத்தியதை ஒரு தமிழன் வியந்து பார்த்தால், அவனும் கேவலமானவனே என்பது என் கருத்து.

சட்டப் பேரவை உரிமையை மீறி விட்ட குற்றத்தின் பேரில் முரசொலி ஆசிரியர் செல்வம் கைது செய்யப்பட்டு, சட்டமன்ற வளாக அறை ஒன்றில் வைக்கப் பட்டிருந்தார். அப்போதுதான் அவரை முதலில் பார்க்கிறேன். மிகவும் மென்மையானவர். அவரிடம் சென்று என்னை அறிமுகப் படுத்திக் கொண்டு எழுத்தாளனான நானும், வானொலியும் அவர் பக்கம் நிற்பதாக உறுதி அளித்தேன். பின்னர், பேரவையில் தற்காலிகமாக