பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/112

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

111



என்பதையும் என்னால் யூகிக்க முடிந்தது. நான் கலைஞரிடம், தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். வானொலிச் செய்தியைக் கேட்டதாகத் தெரிவித்தார். மனம் நெகிழ்ந்து நன்றி தெரிவித்தார். உடனே நான் ‘கனிமொழி உங்களுக்கு மட்டும் மகளல்ல... எனக்கும் மகள் தான் சார்’ என்று சொன்னேன். கலைஞரின் நெகிழ்ந்த குரல், இன்னும் என் காதுகளில் நினைக்கும் போதெல்லாம் ஒலிக்கும். எனக்கும் ஒரு ஆத்ம திருப்தி. கலைஞரை வானொலியில் படாத பாடு படுத்தியதற்குக் கழுவாய் தேடிவிட்டது போன்ற நிம்மதி.

எங்கள் உரையாடலை, கலைஞர் இலக்கியத்தின் பக்கம் திருப்பி விட்டார். அப்போது - அதவாது 1991ஆம் ஆண்டு டிசம்பர் மாத இதழில் வெளியான சுபமங்களாவில் வந்த எனது நேர்காணல் மிகச் சிறப்பாக இருந்தது என்று குறிப்பிட்டார். உடனே நானும், அதே பத்திரிகையில் நவம்பர் மாதம் வெளியான கலைஞரின் நேர்காணல் அற்புதமானது என்றேன். கலைஞர் ஒரு இலக்கியக் குழந்தையாகிவிட்டார். ‘என்னைத்தான் இலக்கியவாதியே இல்லை என்கிறார்களே’ என்று குறைப்பட்டுக் கொண்டார். உடனே நான் ‘நீங்கள் இலக்கியவாதி இல்லை, என்றால் உலகத்தில் ஒருவர் கூட இலக்கியவாதியாக இருக்க முடியாது’ என்று அடித்துச் சொன்னேன்.

கலைஞரின் நேர்காணல் வந்த சுபமங்களாவுக்கு அடுத்த இதழில், இலக்கிய விமர்சகரும், எனக்கு மிகவும் வேண்டியவருமான திகசி அவர்கள், கலைஞர் படைப்புகளில் பிரச்சார வாடை அதிகம் என்றும் இலக்கிய வீச்சு குறைவு என்றும் ஒரு கடிதம் எழுதியிருந்தார். பொதுவாக தி.க.சி. அனைத்து இலக்கியவாதிகளிடமும் நல்லதையே காண்பார். பாராட்டுவார். கலைஞரைப் பற்றி ஏன் இப்படி எழுதினார் என்பது எனக்குப் புரியவில்லை. சுபமங்களா பத்திரிகை, தனக்குப் பிடிக்காதவர்களை பேட்டி கண்டு போட்டு விட்டு, பின்பு அவர்களை இழிவு செய்வது போல் கடிதங்களைப் பிரசுரிக்கும். நவீன தமிழ் கவிஞரான அப்துல் ரகுமானையும், நேர் காணல் செய்து விட்டு, அடுத்த இதழில் அவரையும், உலகெங்கும் தெரிந்த கவிஞர் பிரமிலையும் ஒப்பிட்டு அப்துல் ரகுமானைச் சிறுமைப் படுத்தியது. இந்த இலக்கியச் சிலந்தி வலையில், தி.க.சி. எப்படி சிக்கினார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. நானும் செந்தில் நாதனும் அவரை மானசீகமாகத் திட்டித் தீர்த்தோம்.