பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/118

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

117



என்று கேட்கச் சொல்றாங்க’ என்றார். உடனே நான் 'இது ஒரு தேசியப் பிரச்சனை என்றும், முதல்வருக்கு எதிராக அப்படிக் கேள்விகள் கேட்கப் படவில்லை' என்றும் விளக்கினேன். கவனிப்பு என்று நினைத்தால், நான் எனது அப்போதைய தோழரான நடராசன் மூலமும், அல்லது அவர் மனைவி சசிகலா மூலமும், இன்னும் சொல்லப் போனால் ஜெயலலிதா மூலமும் காரியங்களை சாதித்துக் கொள்ள முடியும். நான் ‘அல்லா’ அறியச் சொல்லுகிறேன். அப்படிப் பட்டவன் இல்லை. உனக்கே தெரியும்' என்றேன். ஜெயலலிதா சொன்னாரோ, இல்லையோ, அந்த நண்பர் அப்படிச் சொன்னார்.

இதற்கிடையே, அதிமுக ஆட்சியின் அராஜகமும், பொது மக்களுக்கு எதிராகப் போய்க் கொண்டிருந்தது.

ஜெயலலிதா, புதுடில்லியில் மத்திய அரசுடன் பேசி விட்டு, சென்னை விமான நிலையத்திற்குத் திரும்புகிற ஒரு நாள், விமான நிலையம் சென்றோம். அரசியல் முக்கியத்துவமான பயணம் என்று நினைக்கிறேன். ஆனால், விமானம் மிகவும் தாமதமாக வரும் என்று அறிவிக்கப்பட்டது. அலுவலகம் போய் விட்டு வரலாம் என்று வெளியே காரில் வந்தால், காவற்துறையினர் அந்தத் தேசியச் சாலையில் அத்தனை பேரையும் இரண்டு பக்கமும் மடக்கிப் போட்டிருக்கிறார்கள். விமானம் தாமதமாக வரப்போகிறது என்று குறிப்பிட்டு, போக்குவரத்தை அனுமதிக்கலாம் என்று நானும் சில பத்திரிகையாளர்களும் குறிப்பிட்டோம். ஆனால், அவர்களோ, விமானம் தரையிறங்கி, முதல்வர் போன பிறகே மற்றவர்கள் போகலாம் என்று மணிக்கணக்கில் காக்க வைத்து விட்டார்கள். இப்படி ஒரு ஆணையை ஜெயலலிதா போட்டிருப்பார் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால், மேடையில் ஒற்றை நாற்காலியில் உட்காரும் அவருக்கு இது பிடிக்கும் என்று அதிகாரிகள் அப்படி நடந்து கொண்டிருக்கலாம்.

தமிழகத்தில் நிலப் பறிமுதலைக் கேட்பதற்கு நாதியே இல்லாமற் போய்விட்டது. நான் வசிக்கும் டாக்டர் இராதாகிருஷ்ண நகர் இரண்டாவது குறுக்குத் தெருவில் முன்னாலும், பின்னாலும் காலி நிலங்கள் கிடந்தன. முன்னால் உள்ள நிலம் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலைச் சேர்ந்த ஒரு அர்ச்சகருக்குச் சொந்தம் என்று அறிகிறேன். இந்த நான்கு கிரவுண்ட் இடத்தை ஆளுங் கட்சியினர் சுற்றி வளைத்தார்கள்.