பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

X




நடந்தது, நடக்காது

இன்னொரு இடத்திலே எந்த அளவுக்கு லஞ்ச லாவண்யம் இந்த மாநிலத்தில் நாட்டில் வளர்ந்து விட்டது என்பதை “கண்ணுக்குத் தெரிந்த கிருமிகள்” என்ற தலைப்பில் அருமை நண்பர் சமுத்திரம், பழனிச்சாமி என்கின்ற ஒரு கதாபாத்திரத்தின் மூலமாக விளக்குகிறார். அந்த கதாபாத்திரத்திற்கு நெஞ்சுவலி, அடிக்கடி மாத்திரை சாப்பிடவேண்டும். ஆனால் அவர் உணவு அருந்தும் பொழுது ஒரு பயங்கரமான செய்தி வருகிறது. சென்னை மாநகரத்தில் சாக்கடை தண்ணீரும் நல்ல தண்ணீரும் ஒன்றாகக் கலந்து விஷமாகிவிட்டது என்ற செய்தி வருகிறது.

இதை உரியவர்களிடத்தில் உடனே சொல்ல வேண்டும் என்பதற்காகப் புறப்படுகிறார். புறப்படுகிற வழிகளிலெல்லாம் பல தடங்கல்கள். அந்த ஒவ்வொரு தடங்கலையும் மீறிக் கொண்டே அவர் கடைசியாக ஒரு இடத்திற்குப் போகிறார். ஒவ்வொரு தடங்கலையும் கடக்க வேண்டுமேயானால் அந்த கதாபாத்திரத்திற்கு லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது. மற்றவர்களுக்கு அந்த லஞ்சத்தை கொடுத்துவிட்டுதான் கடக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் எந்த அதிகாரியாக இருந்தாலும் அவர் போலீஸ்காராக இருந்தாலும், மற்ற எந்த அதிகாரியாக இருந்தாலும், இவர்களை தாண்டிச் செல்ல லஞ்சம் தேவைப்படுகிறது. இவ்வளவும் கொடுக்காமல் பழனிச்சாமி என்கின்ற அந்த நல்ல மனம் படைத்த மனிதர், தான் எந்தச் செய்தியைச் சொல்லி மக்களைக் காப்பாற்ற வேண்டுமென்று சென்றாரோ அதைச் செய்ய முடியாமல் தவிக்கிறார்.

எந்த இடத்தில் நடக்கிறோம் என்பது புரியவில்லை. தலை பம்பரமானது: இருதயம் மத்தளம் ஆனது. சில நிமிடங்களில் அந்தக் குளிரிலும் உடம்பு வியர்த்தது. மார்பும் முதுகும் ஒன்றையொன்று பிய்த்துக் கொள்வது போல் வலித்தன. சொல்ல முடியாத வலி. நரம்புகள் தோய்ந்து கொண்டிருந்தன. வாயில் நுரையும் ரத்தமுமாய் நல்ல தண்ணீரும் சாக்கடையும் கலந்தது மாதிரி. இவரது முகமோ கோணல்மாணலாக. பழனிச்சாமி புரிந்து கொண்டார். ரத்த அழுத்தம் கூடிவிட்டது. சர்க்கரை அளவு ஏறிவிட்டது. இதயத் துடிப்பு குறைந்து கொண்டிருக்கிறது- இந்த நாட்டைப் போல!’

பழனிச்சாமி ‘ஆனந்தம்மா, ஆனந்தம்மா’ என்று தன்னுடைய மனைவியை அழைத்தபடியே தரையில் சாய்ந்தார். காலற்று விழுந்தார். மூச்சற்றுப் போனார். இந்த பழனிச்சாமி செத்ததே செத்தார். இன்னொன்றையும் தெரிந்து கொண்டாவது செத்து