பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

129



தமிழ் மண்ணின் வீரத்தை குறிப்பாக ஒரு வீரத்தாயின் மனப்போக்கை வெளிப்படுத்துவதாக இருந்தது. பெண்பாற் புலவரான காக்கைப் பாடினியார் நச்செள்ளையார், புறநானூறில் ‘நரம்பெழுந் துலறிய..’ என்று துவங்கும் பாடலுக்கு கலைஞர் எழுதிய உரைவீச்சு ... முதுமை தட்டிய வயதிலும் அந்த உரைவீச்சை ஒளவை ஒப்பித்த விதம் கண்கவர் காட்சியாகும்.

ஔவை நடராசான் அவர்களுக்குப் பிறகு நான் பேசினேன், பொதுவாக இந்த மாதிரி விழாக்களில் பேச்சாளர்கள் விழாவின் நாயகரை மட்டுமே முன்னிலைப் படுத்தி விட்டு மற்றவர்களை ‘கோட்டை விட்டு விடுவார்கள். கலைஞர் ‘கோட்டையில் இருப்பதால் இதுவே முறையாகிவிடும். அல்லது அழைத்தவரை ஒப்புக்கு பேசுவார்கள். நான் அப்படி பேசக் கூடாது என்று மேடையிலேயே தீர்மானித்து விட்டேன்.

சிவந்தி ஆதித்தன் அவர்களுக்கும், எனக்கும் உள்ள ஆண்டாண்டு கால நட்பை விளக்கினேன். ஆழமான கால்வாய் போல் நீர் பெருக்கெடுத்த தெரு வழியாக முட்டிக்கால் வரை நனைந்தபடி, 1985ஆம் ஆண்டு எனது வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கு அவர் வந்ததையும், அதற்கு பிறகு என் வீட்டில் வறுமை வெளியேறி விட்டதையும், இதனால் எந்த பாவப்பட்ட அலிகளைப் பற்றி எழுதினேனோ அந்த அலிகளின் நல்வாழ்விற்காக விருது பணமான ஐம்பதாயிரத்தில் பத்தாயிரம் ரூபாயை வழங்க முடிகிறது என்றும் குறிப்பிட்டேன். தினத்தந்தியின் மூத்த செய்தியாளரான சுகுமார் முன் நடக்க, முட்டிக் கால்கள் வரை வெள்ளம் வியாபிக்க என் வீட்டை தேடித்தேடி கண்டுபிடித்த சிவந்தி அவர்கள் என் மீது கொண்டு பாசத்தையும், பற்றையும் எடுத்துரைத்தேன்.

பின்னர், கலைஞர் என் மீது காட்டும் பாசத்தால் எப்படி நெகிழ்ந்து போனேன் என்பதை விலாவாரியாக விளக்கினேன். கலைஞருக்கு நான் ராயல்டி கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தேன். கலைஞரின் தமிழைப் பயன்படுத்தி பல இளம் ஜோடியினரை கிராமங்களில் சேர்த்து வைத்த காதல் கடமையையும் விலாவாரியாக விளக்கினேன். கலைஞரின் தமிழ் எனக்குக் கை கொடுப்பதால் என் படைப்புகளுக்கு கிடைக்கும் ராயல்டியில் ஒரு பகுதி அவருக்குப் போகவேண்டும் என்றேன். கூட்டம் என் பேச்சையும் பெரிதும் ரசித்தது. கலைஞரின் இலக்கிய மேன்மைக்கு, அவரது குப்பைத்தொட்டி சிறுகதையை ஆய்வு முறையில் குறிப்பிட்டேன்.

எ. 9