பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

என் பார்வையில் கலைஞர்



ஒருவாரம் கழித்து ராணி ஆசிரியரும், தமிழ் இதழ்கள் வரலாற்றை வரலாற்று பூர்வமாக எழுதியவரும், திராவிடச் சிந்தனையாளரும், சிவந்தி ஆதித்தன் அவர்களுக்கு வேண்டியவருமான திரு. ஆமா சாமி அவர்களிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு, நான் அப்படி பேசியது சரிதானா என்று கேட்டேன். உடனே அவர் ‘இரண்டு பேருக்கும் இடையிலே இருந்த ஒரு முள்ளை நீங்க எடுத்திட்டிங்க’. நீங்க அப்படி பேசினது தான் சரி. கலைஞருக்கும் எங்க அய்யாவுக்கும் பழையபடி நல்ல உறவு ஏற்படுது. கலைஞரும் மனசிலேயே நினைத்துக் கொண்டிருக்காமல் அப்படிக் கொட்டி விட்டார். இனிமேல் முதல்வரும் மனதில் எதையும் வைத்திருக்க மாட்டார். அந்த வகையில் உங்களுக்கு எங்கள் நன்றி’ என்றார்.

அந்த விழாவில் மனதில் அழுத்தி இருந்த அந்த சுமையை கலைஞர் கீழே தூக்கிப் போட்ட நேர்த்தி இருக்கிறதே, அது கேட்டவர்களுக்கு மட்டுமே புரியும். இப்படி மனப்பாரத்தை பூவை இறக்குவது போல இறக்கும் பண்பாடும் சொல்லாற்றலும் எனக்குத் தெரிந்து கலைஞருக்கு மட்டுமே உண்டு என்று நினைக்கிறேன். இந்த இருட்டடிப்பை கலைஞர் சுட்டிக்காட்டிய போது, சிவந்தி அவர்களும் வேறு வழியில்லாத ஒரு மாணவனைப் போல அதாவது ‘ஏன் லேட்டு’ என்றால், லேட்டு சார்’ என்று சொல்லும் பள்ளி மாணவன் போல் சிரித்த காட்சியை யாராவது புகை படமாக எடுத்திருந்தால், அது புகைப்பட கண்காட்சியில் முதல் பரிசை பெறும்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஒருநாள் சென்னையில் உள்ள தமிழக திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் இயக்குநர் அமிர்தம் அவர்கள் என்னோடு தொடர்பு கொண்டு சிறந்த திரைப்படங்களை தேர்ந்தெடுக்கும் குழுவில் நான் உறுப்பினராக இருக்க வேண்டும் என்று கலைஞர் விரும்புவதாக தெரிவித்தார். எனக்கு இந்த மாதிரியான சமாச்சாரங்களில் அதிக ஈடுபாடு கிடையாது. அதே சமயம் கலைஞர் சொல்லைத் தட்டுவது போல் நடந்து கொள்வதும் சரியாகப் படவில்லை. கலைஞர் என் மீது கொண்டிருக்கிற அன்பு கண்டு ஆனந்தித்தேன். அதே சமயம் அவர் என் மீது கொண்டிருக்கும் நம்பிக்கை, சென்னை தொலைக்காட்சி ஆசிரியரான என் மீது வைத்த நம்பிக்கை போல் பொய்த்து விடக் கூடாதே என்கிற பயமும் ஏற்பட்டது. ஆகவே, கலைஞரிடம் புகார் போகக் கூடாது என்பதற்காக அந்த குழுவோடு ஒத்துப் போக வேண்டும் என்று பலதடவை மனதில் சொல்லிக் கொண்டேன்.