பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

என் பார்வையில் கலைஞர்



பாதிக்கப்பட்டோர் விண்ணப்பித்தலை விட்டு விட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளே தத்தம் கிராமங்களுக்குச் சென்று உதவிக்கு தகுதியுரிய அத்தனை பேரையும் சுயமாக கணக்கெடுத்து அரசு சார்பில் உதவ வேண்டும் என்று குறிப்பிட்டேன். கிராமங்களில் உதவி பெற தகுதி பெற்றும் உதவி மறுக்கப்படுகிறவர்களை கண்டறிய அரசு ஊழியர்களுக்கு தெரியாமலே கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும். இதில் பலதரப்பினரும் இடம் பெற வேண்டும் என்றும் எழுதியிருந்தேன்.

இரண்டாவது குறிப்பில், வடலூரில் உள்ள வள்ளலார் வளாகத்தை மேன்மைப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தேன். வள்ளலாருக்கு பின்பு தோன்றிய, ரமணர், அரவிந்தர், சேஷாத்திரி போன்ற பெரியவர்கள் தவமிருந்த இடங்கள் பளிங்கு மண்டபங்களாய் காட்சியளிப்பதைச் சுட்டிக் காட்டியிருந்தேன். சங்கராச்சாரியார் போன்றவர்களைப் போல் அல்லாது தமிழ் வழிபாடு, சாதியமறுப்பு, அனைத்து மதத்தினரும் ஏற்றுக் கொள்ளும் பூசை புனஸ்காரம் இல்லாத அருட்பெருஞ்ஜோதி வழிபாடு - ஆகியவற்றைக் கொண்டு வந்த அசல் தமிழ் ஆன்மீகப் போராளியான வள்ளலாரின் வடலூர் வளாகத்தை அமிர்தசரஸ் பொற்கோயில் போல் ஆக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தேன். இதனைப் படித்துப் பார்த்த கலைஞர் என் கருத்தை ஏற்றுக் கொண்டார்.

காஞ்சி மடத்துக்குச் செல்லும் வடநாட்டு வாசிகளையும், வெளிநாட்டு தலைவர்களையும் தமிழ் மண்ணை உள்ளது உள்ளது போல் விளக்கும் வடலூர் வளாகத்திற்கு வரவழைக்கும் வகையில் அந்த வளாகம் மேன்படுத்த வேண்டும் என்பதை கலைஞரும் ஒப்புக் கொண்டார். தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தமிழ்க் குடிமகன் என்னை அடுத்து தன்னைச் சந்திக்க போவதாகவும், அவரிடம் இந்தக் குறிப்பை தக்க நடிவடிக்கைக்காக கொடுக்கப் போவதாகவும் குறிப்பிட்டார். நான், அமைச்சர் தமிழ்க் குடிமகன், விழுப்புரம் மாவட்ட அமைச்சர் பன்னீர் செல்வம் ஆகிய மூவரும் ஒன்று கூடி, ஆவன செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மூன்றாவதாக ஒரு இரகசியக் குறிப்பைக் கொடுத்தேன். கலைஞர் பொறுப்பேற்ற கால இடைவெளியில் ஏற்பட்டு வரும் எதிர்வினைகளைச் சுட்டிக் காட்டி அதை முறியடிப்பதற்கான