பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

137



சட்டப்பூர்வமான, அமைதி வழியிலான குறிப்புதான் அது. அவரது கழகம் மட்டும் இலைமறைவு, காய்மறைவாக ஆதரவளித்தால் தனிமனிதான் நானே, அந்தத் திட்டத்தை முன்னின்று செயல்படுத்துவதாக தெரிவித்தேன். வள்ளலார் பேச்சு வந்ததும் உடனடியாக பதிலளித்த கலைஞர் அப்போது மெளனமாக இருந்தார். நான் வற்புறுத்திய போது யாதார்த்த நிலையை அவர் விளக்கினார். சேம் சைடிலேயே கோல் போட்ட சில பேர்வழிகளின் பெயர்களையும் சொன்னார். உடனே நான் நேர்காணலில் முத்திரைப் பதிக்கும் வீரபாண்டி போன்றவர்களும் கலைஞருக்கு விசுவாசிகளாக இருக்கிறார்கள் என்றேன். கலைஞர் குறிப்பிட்ட காரணங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவை, ஆனால் வெளியிடக் கூடியவை அல்ல.

நான்காவது குறிப்பு நமது மாநில அளவில் மத்திய சாகித்ய அகடாமியைப் போல் ஒரு அமைப்பை நிறுவ வேண்டும் என்பது. மத்திய அரசின் இலக்கியக் கூறுகளாக விளங்கும் சாகித்திய அக்காதெமியும், நேஷ்னல் புக் டிரஸ்டும் பாரபட்சமாகவே செயல்பட்டு வருகின்றன. இதன் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர்களும் திராவிட கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள். தமிழகத்தில், இருபதாம் நூற்றாண்டின் நாற்பதுகளிலும், ஐம்பது, அறுபதுகளிலும் மகத்தான் தாக்கத்தை ஏற்படுத்திய திராவிட இயக்கமும், இலக்கியமும் இந்த ஆலோசனைக் குழு பேர்வழிகளுக்கு வேப்பங்காயாகப் போய்விட்டன. வேண்டப்பட்ட பலருக்கு ஓசைப் படாமல் பொறுப்புகளைக் கொடுப்பதும், இவர்களை அகடாமி சார்பில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதும் இன்றுவரை தொடர்கிறது. இப்படிப் போகிறவர்களும் தமிழ் மண்ணை கொச்சைப் படுத்தும் வகையிலேயே பேசிவிட்டு திரும்புகிறார்கள்.

ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். இந்திய சுதந்திரதின பொன்விழாவின் போது, நாட்டில் பதினெட்டு மொழிகளில் உள்ள ஒவ்வோர் மொழியில் இருந்தும் மூன்று தலைமுறை கவிஞர்கள் டில்லியில் கவிதைபாட அழைக்கப் பட்டிருந்தார்கள். தமிழிலும் சுதந்திரத்திற்கு பிறகு பிறந்த கவிஞர் என்ற முறையில் வைரமுத்தும், சுதந்திரத்தோடு பிறந்த கவிஞராக ஈரோடு தமிழன்பனும் கவிதை பாட அழைக்கப் பட்டார்கள். வரவேற்கத்தக்கதே.