பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

XII


என்னைப்பற்றி நான்
-சு.சமுத்திரம்

என் பார்வையில் கலைஞர் என்ற இந்த நூலை படிப்பதற்கு முன்பு என் பார்வை என்ன என்று அறிந்து கொள்ளும் ஆவல், வாசகர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ, அதை தெரியப்படுத்த வேண்டிய உற்சாகமும் கட்டாயமும் எனக்கு ஏற்பட்டுள்ளன. இந்த வரிகளை எழுதும்போது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு குமுதம் பத்திரிகையில், கா, கா, கா என்ற தலைப்பில் நான் எழுதிய சிறுகதையே நினைவுக்கு வருகிறது. அதில் இப்படி ஒரு பாத்திரத்தை சித்தரித்து இருந்தேன்.

‘பண்டாரம் என்னமோ சிவப்புத்தான். ஆனாலும் அவனை காக்கா என்றே அழைப்பார்கள். அவனது மேலதிகாரி, ஆகாயத்தில் வெள்ளைக் காக்கா பறப்பதாக சொன்னால், ‘ஆமாம் நானும் பார்த்தேன்’ என்று சொல்லமாட்டான். அப்படிச் சொன்னால், அந்த அதிகாரியோடு சரிக்குச் சமமாய் பேசியதாய் ஆகிவிடுமாம் ஆகையால் ‘நீங்கள் பார்த்ததை நான் பார்த்தேன் என்பான்.’

நான், எனது பாத்திரத்தை சித்தரித்து இருப்பது போலவேதான், நம்மைவிட மேன்பட்டவர்களைப் பற்றி, நாம் எழுதும்போது ஒரு காக்காத்தனம் வந்து விடுகிறது. பெரும்பாலானவர்கள், முழுக்க முழுக்க, குறிப்பிட்ட ஒரு சந்தர்ப்பத்தில், எவர் மேலோங்கி நிற்கிறாரோ அவரைப் பற்றி புகழ்ந்து தள்ளி, காரியம் சாதித்துக் கொள்வதையே நோக்கமாக கொண்டவர்கள். கலைஞரைப் பற்றிய பல நூல்களும், இப்படிப் பட்டவையே. இந்தப் பட்டியலில் இந்த நூலும் இடம் பெற்றுவிடக் கூடாது என்பதற்காகவே என்னைப் பற்றி வாசகர்களிடம் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.

என்னைப்போல் கலைஞரை வெறுத்தவர் எவரும் இல்லை. இப்போது என்னைப்போல் அவரை விரும்புகிறவரும் எவரும் இல்லையென்பதை வாசகர்கள் இந்த நூலை படித்துவிட்டு புரிந்து கொள்ளலாம். இந்த மாற்றம், ஆண்டுக் கணக்கில் அங்குலம் அங்குலமாக ஏற்பட்ட ஒன்றாகும். இப்போதுகூட, நான் கலைஞரின், இலக்கிய நண்பர்களின் உள்வட்டத்தில் இருப்பவனும் இல்லை. இருக்க நினைத்தவனும் இல்லை. ஆனால், கலைஞர் மீது இந்த உள்வட்டக்காரர்களுக்கே இல்லாத ஒரு ஈடுபாடும் ஒன்றிப்பும் எனக்கு உண்டு. இந்த ரசவாதம் எப்படி ஏற்பட்டது என்பதை விளக்குவதற்காகவே இந்த நூல். இது, கலைஞரைப் பற்றிய நூல் என்பதை