பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

என் பார்வையில் கலைஞர்



இதழை மாநில செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் முல்லை வேந்தன் அவர்கள் சென்னையில் வெளியிட்டார்.

இந்த இதழில் கலைஞரின் நாலைந்து சிறுகதைகளும், அண்ணா இறந்தபோது கலைஞர், வானொலியில் ஆற்றிய உரை வீச்சும் இடம் பெற்றன. இவற்றைப் படித்துப் பார்த்த பிறமொழி வாசகர்கள் குறிப்பாக மார்க்சிய தோழர்கள் கலைஞரின் இலக்கியத்தில் ஒரு போர்க்குணம் இருப்பதை கோடி காட்டினார்கள்.

இப்படி கலைஞரின் இலக்கியத்தின் பக்கம் எனது கவனம் திரும்பியபோது, கலைஞருக்கு எதிரான பல்வேறு அரசியல் நிகழ்வுகள் ஒன்று திரண்டன. சட்டப் பேரவை தேர்தலில் தோல்வியுற்ற ஜெயலலிதா அவர்கள் மரித்தெழுந்தார். மேற்கு மாவட்ட, தென் மாவட்ட சாதிய சக்திகளோடு கைகோர்த்துக் கொண்டார். இந்தச் சமயத்தில் நான் கண்ட சில ‘கள் யாதார்த்தங்களை’ கலைஞரிடம் சொல்வதற்காக அவரைச் சந்திக்க சண்முகநாதனிடம் தேதி கேட்டேன். கலைஞர் அனுமதித்து விட்டார்.

வழக்கம் போல் கலைஞரை மாடியில் உள்ள அவரது அறையில் சந்தித்தேன். நான் கண்ட யதார்த்தங்களை அவரிடம் விளக்கினேன். ஜெயலலிதா தலைமையில் பலமான எதிர்சக்தி உருவாகி இருப்பதைச் சுட்டிக்காட்டி, ஒரு குறிப்பிட்ட சாதியினர் திமுகவினருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று வாதாடினேன். ஆனால், கலைஞர் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த சாதியில் திமுகவில் நாற்பதுக்கும் அதிகமான பேரவை உறுப்பினர்கள் இருப்பதை சுட்டிக்காட்டினார். சென்ற சட்டப் பேரவை தேர்தலிலும் இவர்கள் தனக்கு ஒட்டு மொத்தமாக வாக்களித்ததாக தெரிவித்தார். இந்தக் கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அதே சமயம் சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பதில் பலனும் இல்லை. நான், சென்ற சட்டப்பேரவை தேர்தல் போல், நாடாளுமன்ற தேர்தல் இருக்காது என்றும் திமுகவிற்கு அப்போதைய அளவிற்கு வாக்குகள் கிடைக்காது என்றும் குறிப்பிட்டேன்.

உடனே முதல்வர் டெலிகாமில் பேசி, சண்முகநாதனை ஒரு குறிப்பிட்ட தேதியில் வெளியான முரசொலியை எடுத்துக் கொண்டு வரச்சொன்னார். ‘நீங்கள் தான் முரசொலி படிப்பதில்லையே’ என்று ஒரு செல்லக் குட்டும் வைத்தார்.